“டிரம்புக்கு நோபல் பரிசை மோடி பரிந்துரைக்காததுதான்.. வரி பஞ்சாயத்துக்கு காரணம் ”- நியூயார்க் டைம்ஸ்
நியூயார்க்: இந்தியாவுக்கு 50% வரியை அமெரிக்கா விதித்திருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் இந்த மோதல் போக்குக்கு காரணம் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மோடி பரிந்துரைக்காததுதான் என நியூயார்க் டைம்ஸ் கூறியிருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், "ஜூன் 17ம் தேதி ஒரு போன் கால் மூலம், இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவந்ததாக டிரம்ப் அறிவித்தார். போர் நிறுத்த முயற்சிக்காக பாகிஸ்தான் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப் போவதாகவும், தான் இந்தப் பரிசுக்கு வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வதாகவும் டிரம்ப் கூறி வருகிறார். மோடியும் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதே மறைமுகமான டிரம்பின் எதிர்பார்ப்பாக இருந்ததாக, விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

டிரம்ப்பின் எதிர்பார்ப்பை மோடி ஏற்கவில்லை. அண்மையில் ஏற்பட்ட போர்நிறுத்தத்திற்கும் அமெரிக்காவின் தலையீட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடியாகத் தீர்க்கப்பட்டது என்றும் அவர் டிரம்பிடம் கூறினார்.
மோடியின் கருத்துக்களை டிரம்ப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்த கருத்து வேறுபாடும், நோபல் பரிசு விவகாரத்தில் மோடியின் ஈடுபாடின்மையும் இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் முதல் பதவிக்காலத்திலிருந்தே நெருக்கமாக இருந்த இந்த உறவு, தற்போது சீர்குலைந்துள்ளது.
இதற்கு பின்னர்தான் முதலில் 25%, அதற்கடுத்து 25% என மொத்தம் 50% வரியை டிரம்ப் அறிவித்தார். முதல் முறை டிரம்ப் அதிபராக இருந்தபோது மோடியும், டிரம்பும் இணை பிரியாத நண்பர்களை போல இருந்தனர். டெக்ஸாஸில் ஹவுடி மோடி என்று டிரம்ப் நிகழ்ச்சியை நடத்த, பதிலுக்கு சுமார் ஒரு லட்சம் பேரை திரட்டி நமஸ்தே டிரம்ப் என்று நிகழ்ச்சியை மோடி நடத்தியிருந்தார். ஆனால் இரண்டாவது பதவிக்காலத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
இது எல்லாம் போர் நிறுத்தம் நேரத்திலிருந்துதான் தொடங்கியது. இந்தியாவை பொறுத்தவரை, பாகிஸ்தான் விஷயத்தில் மூன்றாம் நாடுகளின் தலையீடு ஏற்கப்படாத ஒன்று. குறிப்பாக அமெரிக்காவின் தலையீடு மோடியின் ஆளுமையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. எனவேதான் இந்திய அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போர் நிறுத்தம் குறித்த மத்திய அரசு அதிகாரிகள் டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து மறுத்து வந்தாலும் கூட, பிரதமர் மோடி இதுவரை இதை ஓபனாக பேசவில்லை. மறுபுறம் டிரம்ப் தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில், போரை நிறுத்தியது நான்தான் என்று கூறி வருகிறார். இந்நிலையில் இப்போது நடக்கும் வரி பஞ்சாயத்துகளுக்கு இந்த விவகாரம்தான் அடிப்படை என்று நியூயார்க் டைம்ஸ் கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications