எங்களையே ஏமாத்துறாங்க.. திடீரென கண் சிவந்த டிரம்ப்.. ஈரானில் களமிறங்கும் அமெரிக்க ராணுவம்?
நியூயார்க்: அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை என்பது வரும் 19ம் தேதி ரோமில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் என்ன நடக்கும்? என்பது பற்றி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது ஈரானுக்கான அடுத்தக்கட்ட வார்னிங்காக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் நாடுகள் எலியும், பூனையுமாக உள்ளன. இருநாடுகள் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்த மோதல் என்பது இன்னும் உச்சமடைந்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்பது தான் காரணம்.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஈரானை, அமெரிக்கா படைகள் தாக்கலாம் என்ற நிலை உள்ளது. இதனால் அணுஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது. இதனை டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. இதனால் ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஈரானுக்கு டிரம்ப் கடிதம் எழுதினார்.
இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு டொனால்ட் டிரம்பின் தொடர் மிரட்டலை தொடர்ந்து கடந்த 12ம் தேதி இருநடுகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்தது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப் மற்றும் ஈரான் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்றனர். ஓமன் நாட்டு தலைவர் மத்தியஸ்தம் செய்தார். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் நடந்தது. இருப்பினும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
ஆனாலும் கூட இருநாடுகள் இடையேயான தொடர் மோதலுக்கு நடுவே இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை என்பது இருநாடுகள் இடையேயான உறவில் பாசிட்டிவான அப்ரோச்சை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 2ம் கட்ட பேச்சுவார்த்தை என்பது ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை என்பது ரோம் நகரில் நடைபெற உள்ளது. இத்தாலி தலைநகராக ரோம் உள்ளது. அங்கு வரும் 19 ம்தேதி அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விப்காஃப் உடன் துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி பங்கேற்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் ஈரான் உடனான பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் ராணுவ நடவடிக்கையை எடுப்பீர்களா? என்று டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் தாமதத்தை கடைப்பிடித்து வருகிறது. இது தொடரும் பட்சத்தில் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டேன்.
ஏனென்றால் ஈரான் அணுசக்தி திட்டத்தில் அணுஆயுதம் தயாரிப்பை நோக்கி செல்கிறது. என்னை பொறுத்தவரை ஈரான் அணுஆயுதத்தை முற்றிலுமாக மறந்துவிட வேண்டும். ஈரானிடம் அணுஆயுதம் இருக்கவே கூடாது. அந்த நாடு அணுஆயுதத்தை வைத்திருக்கவும் முடியாது. மீறினால் நிச்சயமாக ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை என்பது இருக்கும். இதனை தடுக்க ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான ஈரானை டொனால்ட் டிரம்ப் இப்படி மிரட்டி வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை மிரட்டி உள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகள் வீசப்படும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் ஈரானை தாக்கும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தங்களின் படை தளங்களில் அமெரிக்கா வீரர்களையும், போர் விமானங்களையும் குவிக்கிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் படை தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் இருநாடுகளும் முதற்கட்ட பேச்சவார்த்தையை முடித்துள்ளது. 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இருநாடுகளும் தயாராகி வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ராணுவ நடவடிக்கையை எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று வார்னிங் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications