உக்ரைன் விவகாரம்: டிரம்ப், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்.. ஏன் தெரியுமா?
மாஸ்கோ: உக்ரைனுடனான 30 நாள் போர் நிறுத்தம் செய்வதற்கான முன்மொழிவை ஏற்கும் மனநிலைக்கு புதின் வந்துள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து புதின் பேசினார். அப்போது உக்ரைன் - ரஷ்யா பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் டிரம்ப், பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவிப்பதாக புதின் கூறினார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் டிரம்ப் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த டிரம்ப், உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்துவதாக அறிவித்தார்.

30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம்
இதனையடுத்து ஜெலன்ஸ்கியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவில் அமெரிக்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார். ரஷ்யாவும் இதை ஏற்றால் உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் ரஷ்யா இழுத்தடித்து வந்தது.
இந்த நிலையில், தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படும் வகையில் ரஷ்ய அதிபர் புதின் பேசியிருக்கிறார். இது தொடர்பாக புதின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "போர் நிறுத்தம் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டும் எனவும், 30 நாள் போர் நிறுத்த விவகாரத்தில் சில நுணுக்கமான விஷயங்கள் இருப்பதாகவும் கூறினார். மேலும், இது குறித்து டிரம்புடன் ஆலோசிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன புதின்
ஆனால் இந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என தெரியவில்லை. எனினும், போர் நிறுத்தத்திற்கு புதினும் சில நிபந்தனைகளுடன் கிரீன் சிக்னல் காட்டியிருப்பது விரைவில் உக்ரைன் - ரஷ்யா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. முன்னதாக பிரஸ்மீட்டை தொடங்கியதும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு புதின் நன்றி கூறினார்.
புதின் கூறுகையில், "உக்ரைன் விவகாரத்தில் அதிக அளவு கவனம் செலுத்திய டிரம்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைவரும் நிறைய பங்களிப்பு அளித்தனர். சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த விவகாரத்திற்காக நிறைய நேரங்களை அர்ப்பணித்தனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார். உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில், இது போருக்கான கால கட்டம் இல்லை என இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications