திருப்பி கொடுப்போம்.. இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளை மிரட்டிய டிரம்ப்.. ஜெய்சங்கர் தந்த பதிலடி!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிரம்ப்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது.

அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிடலாம். வேறு யாராவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் அவர்கள் போய் வியாபாரம் செய்யட்டும். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பதிலடி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிரம்ப்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் ஒரு அதிபர் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வருகிறார் என்றால் அவரின் முதல் கட்ட ஆட்சிக்கும்.. இரண்டாம் கட்ட ஆட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் கவனிக்கப்படும்.
முதல் முறை ஆட்சி செய்தது போலவே செய்வாரா என்ற கேள்விகள், எதிர்பார்ப்புகள் நிலவும். இங்கே இந்தியா, அமெரிக்கா இரண்டும் பெரிய நாடுகள். இரண்டும் வலுவான பொருளாதாரம் கொண்ட நாடுகள். நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் இரண்டு நாட்டு உறவுகள் இத்தனை காலம் வலுவடைந்துகொண்டே இருக்கிறது. இனியும் வலிமை அடையும்.
அவர்கள் எதையாவது கொடுத்தால்.. நாங்கள் திருப்பி கொடுப்போம். இது கொடுக்கல் வாங்கல் முறையில்தான் இருக்கும். இரண்டு நாட்டு உறவு முறைகள் அப்படிதான் இருந்தது. இனியும் அப்படித்தான் இருக்கும் , என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ்: பிரிக்ஸ் நாணயம்; பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம்.
பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையே இந்த நாணயத்தை மட்டுமே பயன்படுத்தும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும்.
இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இதைத்தான் டிரம்ப் எதிர்த்து உள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் டாலரை கைவிட்டால் அது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்கும். இதைத்தான் தற்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்து உள்ளது












Click it and Unblock the Notifications