கொதிக்குது கடல்.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை! கண்முன் கருகும் உலகம்! சூப்பர் எல் நினோவால் சிக்கல்!
நியூயார்க்: எல் நினோ வின் தாக்கம் காரணமாக உலகில் உள்ள பெருங்கடல்களில் இதுவரை பதிவானதிலேயே உச்சபட்ச கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது பதிவாகியுள்ளது. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றத்துடன், பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த சூப்பர் எல் நினோவே இந்த அசாதாரண வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வு எல் நினோ என அழைக்கப்படுகிறது. இது வழக்கமான நிகழ்வு என சொன்னாலும், இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் கடும் வறட்சி, வெப்பநிலை உயர்வோடு, மற்ற பகுதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு, புயல்கள் உள்ளிட்டவை உருவாக்கலாம்.

இந்நிலையில் 2026 எல் நினோவாக இல்லாமல் சூப்பர் எல் நினோவாக உருவாகியுள்ளது. இதனால் உலகில் உள்ள பெருங்கடல்களில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச கடல் மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.
ஐரோப்பாவின் பூமி கண்காணிப்பு அமைப்பான கோப்பர்நிக்கஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி ஆகஸ்ட் 22ஆம் தேதி உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை 21.1 டிகிரி செல்சியஸ்-ஆக பதிவாகியுள்ளது. 1979 ஆம் ஆண்டு முதல் கடல் வெப்பநிலையை தினசரி அடிப்படையில் கண்காணித்து வரும் கோப்பர்நிக்கஸ் அமைப்பு இதுவரை பதிவு செய்ததிலேயே இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 29.09 டிகிரி செல்சியஸ் என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. தற்போது அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக உள்ள கடல்களின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சூப்பர் எல் நினோ கடல் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும் முக்கிய காரணமாக மாறி உள்ளது.
இது தொடர்பாக பேசி உள்ள கோப்பர்நிக்கஸ் அமைப்பின் காலநிலை பிரிவை சேர்ந்த சமந்தா பர்கெஸ்," சூப்பர் எல் நினோ கடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. ஆனால் அந்த வெப்பம் பல ஆண்டுகளாக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவரும் புவி வெப்பமயமாவதோடு சேர்ந்து கொள்வதால் தற்போது கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அபாயங்கள் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.
கடல் வெப்பநிலை உயர்வது என்பது சாதாரண பிரச்சனை கிடையாது. உலகின் ஒட்டுமொத்த வானிலையிலும் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். கடல்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கடல் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் வெப்பமான கடல் வளிமண்டலத்திற்கு அதிக வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் தரும். இதனால் புயல்கள் மேலும் தீவிரமடையலாம். நிலப்பரப்பில் கடுமையான வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும் வெப்பமான கடல்களில் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிம் திறன் குறையும். இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து கால்நிலை மாற்றம் மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது. உலகின் பல கடல் பகுதிகளில் தனித்தனியாக இதற்கு முன்பே வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேற்கு மத்திய தரைக் கடல் பகுதி மட்டுமின்றி, பூமியின் துருவப் பகுதிகளில் கடல் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றமே கருதப்படுகிறது/ தற்போது உருவாகியுள்ள சூப்பர் எல் நினோ இந்த வெப்பநிலை உயர்வை மேலும் தீவிரப் படுத்தி வருவதால் கடல்களின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு காணப்படலாம் என கோபர்நிக்கஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
