ஐநா அமைப்புகளிலிருந்து கழன்று கொள்ளும் அமெரிக்கா! டிரம்ப்பால் இந்தியாவுக்கும் சிக்கல்!
நியூயார்க்: ஐநாவின் அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று கூறி, அதற்கான நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்து போட்டிருப்பது இந்தியாவுக்கு கவலைகளை எழுப்பியிருக்கிறது.
ஐநா மனித உரிமை அமைப்பு (UNHRC), யுனெஸ்கோ(UNESCO), ஐநா நிவாரண முகமை(UNRWA) உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாகவும், இந்த அமைப்புகளுக்கு இனி நிதியை வழங்க முடியாது என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு இரண்டு கவலைகளை எழுப்பியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
1. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், இதை ஐநா மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்ப அமெரிக்காவின் நிதி தேவையென்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
காஷ்மீர் மட்டுமல்லாது ஹத்ராஸ் போன்ற சம்பவங்களில் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், அமெரிக்காவின் நிதி வெட்டு இனி இது போன்ற விஷயங்களுக்கும், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் ஐநா மனித உரிமை அமைப்பு குரல் கொடுப்பதை குறைத்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.
2. பாகிஸ்தான் மற்றும் சீனாவிலும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. அது குறித்து உலகத்திற்கு தெரிய வேண்டும் எனில், ஐநாவின் மனித உரிமை ஆணையம் இதில் தலையிட வேண்டும். ஆனால் அமெரிக்காவின் நிதி வெட்டு காரணமாக இந்த செயல்பாடுகள் முடங்கிவிட வாய்ப்பு அதிகம்.
ஐநா மனித உரிமை ஆணையம் சிறப்பாக இயங்க நிதி தேவை. இந்த ஆணையத்திற்கு வரும் மொத்த நிதியில் 4ல் 1 பங்கு அமெரிக்காவிடமிருந்துதான் வருகிறது. குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டு ஆணையத்திற்கு மொத்தம் ரூ.42,418.5 கோடி நிதி வந்திருந்தது. இதில் அமெரிக்கா மட்டும் ரூ.16.5 ஆயிரம் கோடியை கொடுத்திருந்தது.
கடந்த சில நாட்களாக ஐநா மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்படவில்லை என்று சொல்லி இனி நிதி வழங்க மாட்டோம் என்றும், ஐநா மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களில் அமெரிக்கா பங்கெடுக்காது என்றும் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
ஐநாவை பொறுத்தவரை அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக சீனா இருந்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரை நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் சீனாதான். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தம் குறித்து சீனா கொண்டு வந்த தீர்மானங்கள் அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டியிருந்தது.
மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் உள்ள 19 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்த போரை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததே அமெரிக்காதான். ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் கொடுக்கும் பணத்தில் நிதி உதவி செய்வதா? என்கிற நோக்கத்திலும் தற்போது ஐநா அமைப்புகளிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
இப்படி செய்வதன் மூலம் சீனாவின் கை இந்த அமைப்புகளில் ஓங்கும். இது இந்தியாவுக்கு நல்லதல்ல. எனவே அமெரிக்கா இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications