அசுத்த தண்ணீரில் கண் சொட்டு மருந்தா? 3 பேர் பலி.. சென்னை நிறுவனம் மீது சீறிய அமெரிக்கா.. உண்மையா?
நியூயார்க்: சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கண்சொட்டு மருந்தால் பார்வை பறிபோயுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.. சம்பந்தப்பட்ட சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
சமீப காலமாகவே இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்து வருகின்றன... இது இந்திய சுகாதாரத்துறையின் தரத்தின் மீது பெரும் அழுத்தத்தை தந்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இரு இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தின் பரபரப்பு முடிவதற்குள்ளேயே, கண் சொட்டு மருந்து குறித்த புகார் கிளம்பி உள்ளது.. இந்த புகாரை தெரிவித்து வருவது அமெரிக்காவாகும்..

கண்பார்வை
குலோபர் பார்மா ஹெல்த் கேர் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்து மீதுதான் இந்த புகார் கிளம்பி உள்ளது.. இது சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும்.. அதாவது சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த நிறுவனம் உள்ளதாம்.. இந்த சொட்டு மருந்தினை அமெரிக்காவில் பயன்படுத்தி, 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேருக்கு கண்பார்வை பறிபோனதாகவும், 12 பேருக்கு தொற்றுபாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டினை அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த கண் சொட்டு மருந்தினை தொடர்ந்து பயன்படுத்தினால், தொற்று பாதிப்பு அதிகமாகும் என்றும் அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.

அசுத்தமான தண்ணீர்
காரணம், அசுத்தமான தண்ணீரால் இந்த சொட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது.. எனவே, அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்த சொட்டு மருந்தினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னதாக, அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு, எஸ்ரிகேர், (EzriCare),எல்எல்சி, டெல்சாம் பார்மா போன்ற நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் செயற்கை கண்ணீர் லூப்ரிகண்ட் சொட்டுமருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் பற்றி விசாரணை நடத்தி வந்தது.

நிர்வாகத்துறை
பின்னர், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறைக்கு சமீபத்தில் எச்சரிக்கை ஒன்றையும் அனுப்பியிருந்தது. அதில், கண் பாதிப்பு, நிரந்தர பார்வை இழப்பு, ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக மரணம் என 55 பாதகமான விளைவுகளால் இதுவரை பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை வெளியிட்ட எச்சரிக்கையிலும், அந்த நிறுவனங்களின் மருந்துகளை பயன்படுத்துவதை, வாங்குவதை பொதுமக்களும், மருத்துவர்களும் நிறுத்தவேண்டும் என்றும் அசுத்தமான செயற்கையாக கண்ணீரை வரவழைக்கும் சொட்டுமருந்தை பயன்படுத்துவது கண்பாதிப்புகளை ஏற்படுத்தி பார்வையிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது என்று சுட்டிக்காட்டி இருந்தது.

கண் சொட்டு மருந்து
இந்நிலையில்தான், கண்சொட்டுமருந்துகள் தயாரிப்பில் ஒவ்வொரு நிலையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதால், சென்னையில் உள்ள நிறுவனம் தயாரிக்கும் இந்த மருந்தினை தடை செய்ய வேண்டும் என்றும், அசுத்தமான தண்ணீரில் கண் சொட்டு மருந்தினை தயாரிப்பதாகவும் புகார் கூறியிருப்பது, பெருத்த அதிர்ச்சியை பரவலாக ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. தமிழகத்தை சேர்ந்த அதுவும் சென்னையை சார்ந்த நிறுவனம் தயாரித்த கண்சொட்டு மருந்தினால் 3 உயிர்கள் பறிபோயுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருப்பது, தமிழகத்திலும் கலக்கத்தை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications