'கடன் வலை'யை இந்தியா பக்கம் வீசுகிறதா சீனா?.. ஓடோடி வந்து அலர்ட் செய்யும் அமெரிக்கா.. இதுதான் காரணமா
சீனா வீசும் கடன் வலையில் இந்தியா விழுந்துவிடக்கூடாது என்று அக்கறையுடன் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது
நியூயார்க்: இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு சீனா நிதியுதவி வழங்கி வருவது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வந்த பொருளாதார மந்தநிலை, 2022ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தையடுத்து தீவிரமடைந்தது. தற்போது ஏறத்தாழ திவால் நிலைக்கு சென்றுவிட்டது. சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் நிதியைதான் பாகிஸ்தான் முழுமையாக நம்பியுள்ளது. அதேபோல சீனா தனது பங்குக்கு நிதியை வழங்க முன்வந்திருக்கிறது.
ஏற்னெவே இலங்கை திவாலானபோது அந்நாட்டுக்கு சீனா நிதியுதவி செய்திருந்தது. இந்த உதவியால் ஓரளவு நிலைமையை சரிசெய்ய முடிந்தாலும் முழுவதுமாக அதிலிருந்து இலங்கையால் மீள முடியவில்லை. இவ்வாறு சீனா கொடுத்த கடன் குறைந்த காலத்தில் அதிக வட்டியுடன் இருந்தன. இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில் அந்நாட்டின் சொத்துகள் சீனாவுக்கு சொந்தமாகிவிடும்.

பாகிஸ்தானுக்கு கடன்
தற்போது இதே பாணியில்தான் பாகிஸ்தானுக்கும் சீனா நிதியுதவி அளித்து வருகிறது. சீன மேம்பாட்டு வங்கி வாரியம் (CDB) சுமார் ரூ.58 ஆயிரம் கோடி பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனை பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை வெளியுறவுச் செயலர் 'டொனால்ட் லு' கவலை தெரிவித்துள்ளார். "பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேசத்திற்கு சீனா வழங்கி வரும் கடன்கள் பின்னாட்களில் இந்நாடுகளை ஆட்டிப்படைக்க பயன்படுத்தப்படலாம்" என்று டொனால்ட் லு கூறியுள்ளார்.

சொந்த முடிவு
மேலும், "தங்களுக்கு என்ன தேவையோ அது குறித்து தெளிவாக சொந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் இந்தியா மற்றும் அதன் நாடுகளுடன் பேசி வருகிறோம். அவர்களுக்கு உதவ முன்வந்திருக்கிறோம். சீனா உள்ளிட்ட எந்த அந்நிய சக்திகளின் நிர்பந்தத்தாலும் கடனில் விழ வேண்டாம் என்று கூறி வருகிறோம்" என தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்த அளவில் சீனா உடனான பிரச்னையின்போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது என்றும் டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா
அதாவது, "கண்காணிப்பு பலூன் பஞ்சாயத்து வெடிப்பதற்கு முன்னர் சீனா குறித்து இந்தியாவுடன் நாங்கள் தீவிர உரையாடல்களை மேற்கொண்டோம். இந்த உரையாடல்கள் இனிமேலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல சீனா போன்ற நாடுகள் குவாட் அமைப்பை ராணுவ கூட்டமைப்பு கூறி வருகின்றன. இந்த அமைப்பு எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்டதல்ல" என்றும் கூறியுள்ளார். ஆனால் குவாட் அமைப்பு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே உருவாக்கப்பட்டதாகும்.

ஆயுத விற்பனை
ஏற்கெனேவே இந்திய ராணுவத்துடன் அமெரிக்கா பரஸ்பர நட்பை பாராட்ட விரும்புவதாக கூறியிருந்தது. ரஷ்யாவிடமிருந்து சமீபத்தில் இந்தியா எஸ்-400 வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வாங்கியிருந்தது. இதனை மனதில் வைத்து ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை முடித்துவிட்டு தங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications