குட்டையை குழப்பும் டிரம்ப்! இந்தியாவுக்கு இப்படி ஒரு சிக்கலா? G20 மாநாட்டில் நடக்கப்போகும் ட்விஸ்ட்!
நியூயார்க்: இந்த மாதம் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் G20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இதில் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை என அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு எதிர்மறையான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் இந்த நேரத்தில், டிரம்ப் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதால் இந்தியாவுக்கான வாய்ப்புகள் கை நழுவவும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா சொன்னது என்ன?:
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் G20 உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 2023ல் இந்தியாவில் இந்த மாநாடு நடந்தது. இந்நிலையில் இந்த முறை தென்னாப்பிரிக்காவில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது என்று அதன் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவைதான் இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள். ஆனால் இதற்கு எதிராக தென்னாப்பிரிக்கா செயல்பட்டு வருகிறது என்பது ரூபியோவின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
அமெரிக்காவால் இந்தியாவுக்கு சிக்கல்:
சர்வதேச அளவில் நாடுகள் வளர்ந்து வர வேண்டும் எனில் அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று ஐநா மூலம் கிடைக்கும் அங்கீகாரம். இரண்டாவது, G20 நாடுகளில் கிடைக்கும் நட்புறவு. இந்தியாவை பொறுத்தவரை G20 மாநாடு நல்ல வாய்ப்பு. கடந்த முறை நடந்த G20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை கொடுத்திருந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கும், தெற்கு ஆசியாவில் இந்தியா தலைமை தாங்குவதற்கும் அமெரிக்கா உதவும் என்று வாக்கு கொடுத்திருந்தார்.
ஆனால் ரூபியோவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. குறிப்பாக தெற்கு ஆசியாவில் சீனாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கு இந்தியாவை வளர்த்து விட வேண்டும் என்று பைடன் நினைத்திருந்தார். ஆனால், டிரம்ப் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எனவே இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
சீனாவின் கை ஓங்கும்:
G20 அமைப்பில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்காவும், சீனாவும்தான் இருக்கிறது. இப்போது அமெரிக்கா இதிலிருந்து கழன்றுக்கொண்டால், மீதம் இருப்பது சீனாதான். இந்த அமைப்புக்கு சீனா தலைமையேற்றால் அதனால் இந்தியாவுக்குதான் நெருக்கடி ஏற்படும். சீனா வெளிப்படையாகவே பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் ஆதரவளித்து வருகிறது. இது இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை உருவாக்கும். ஆக அமெரிக்காவின் நடவடிக்கைகள் இத்தனை கவலைகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா பஞ்சாயத்து:
தென்னாப்பிரிக்காவில் உள்ள நிலங்களை, மக்களுக்கு பிரித்து கொடுக்க தேவையான நடவடிக்கை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. நிலங்களில் சுமார் 70% அளவுக்கு வெள்ளையர்கள் கைகளில் இருக்கிறது. இந்த வெள்ளையர்கள் ஐரோப்பிய நாடுகளின் கூலிகளாக செயல்பட்டு, இந்த நிலத்தில் வரும் வருமானத்தை தங்கள் முதலாளிக்கு இவர்கள் அனுப்பி வைக்கிறார்கள். மட்டுமல்லாது இவர்கள் வசம் இருக்கும் நிலத்தில் பெரும்பான்மையான பகுதி, எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கிறது.
ஒரு பக்கம் தென்னாப்பிரிக்க பூர்வகுடிகள் நிலம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறும், நிலம் எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான் அந்நாட்டு அரசு நிலச்சீர்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது.
ஆனால் இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. எலான் மஸ்க் வெளிப்படையாகவே, தென்னாப்பிரிக்கா மீது கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தார். எனவே இந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் G20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications