இந்தியர்கள் நாடு கடத்தல்! அமெரிக்காவில் உள்ளவர்களை திரும்ப பெற ரெடி! டிரம்ப்பை சந்தித்த மோடி பேச்சு
நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் தனது குடிமக்களை திரும்பப் பெற இந்தியா தயாராக உள்ளது, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் உடன் நடந்த சந்திப்பிற்கு பின் அளித்த செய்தியாளர் பேட்டியில் மோடி இப்படி குறிப்பிட்டு உள்ளார்.
மனித கடத்தல் அதிகம் நடக்கிறது. இந்தியாவில் இருந்து பலரை ஏமாற்றி அமெரிக்கா கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பெரிய கனவுகள் இருக்கின்றன. அவர்களின் ஆசைகளை காரணம் காட்டி ஏமாற்றுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் தவறாக வழிநடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

எனவே, இந்த முழு மனித கடத்தல் அமைப்பையும் நாம் தடுக்க வேண்டும். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் தனது குடிமக்களை திரும்பப் பெற இந்தியா தயாராக உள்ளது, அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், என்று பிரதமர் மோடி கூறினார்
நாடு கடத்தல்
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக "முதல் பேட்ச்" விமானம் இந்தியாவிற்கு வந்துள்ளது. இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம். ஆனால் இந்தியா இதுவரை இதில் நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்திய அரசு அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை நேரடியாக இதுவரை எதிர்க்கவில்லை.
ஒரு நாட்டின் ராணுவ விமானம், நாடு கடத்தும் மக்களை கொண்டு வருவதை அந்த நாடு எதிர்க்க வேண்டும். ஆனால் இந்தியா இதை இதுவரை எதிர்க்கவில்லை. அமெரிக்க ராணுவ விமானம் இந்தியாவிற்குள் அனுமதியோடுதான் வந்துள்ளது என்றாலும் கூட இந்தியர்களை நாடு கடத்தி கொண்டு வருவது மிகப்பெரிய நிகழ்வு.. இதை இந்திய வெளியுறவுத்துறை இதுவரை எதிர்க்கவில்லை.
பிரதமர் மோடி இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இந்தியா ஒன்றும் வலிமை இல்லாத நாடு கிடையாது. சர்வதேச அரசியலில் நல்ல பவர் கொண்ட நாடு. அப்படிப்பட்ட இந்தியா இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும் என்று இல்லை.. குறைந்த பட்சம் இதில் ஏதாவது கருத்து சொல்லி இருக்கலாம். ஆனால் இதுவரை இந்தியா சார்பாக அதிரடி எதிர்ப்பு அல்லது கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் தனது குடிமக்களை திரும்பப் பெற இந்தியா தயாராக உள்ளது, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் உடன் நடந்த சந்திப்பிற்கு பின் அளித்த செய்தியாளர் பேட்டியில் மோடி இப்படி குறிப்பிட்டு உள்ளார்.
மோடி அமெரிக்கா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி ஜாயின்ட் ஆண்ட்ரூஸ் தளத்தில் வந்திறங்கியபோது புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு வரவேற்பை அளித்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இன்று பிரதமர் மோடி அமெரிக்க NSA மைக்கேல் வால்ட்ஸ், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் DOGE தலைவர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார். முன்னதாக நேற்று, பிரதமர் மோடி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்டை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.












Click it and Unblock the Notifications