நியூயார்க்கை ஆளப்போகும் இந்திய வம்சாவளி.. ஆனா பாருங்க யாரும் கொண்டாடல! காரணம் இதுதான்!
நியூார்க்: நவம்பர் மாதம் நடைபெற உள்ள நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த 'ஜோஹ்ரான் மம்தானி' தேர்வாகியுள்ளார். ரிஷி சுனக், காஷ் படேல், ஜெய் பட்டாச்சார்யா மற்றும் துளசி கப்பார்ட் ஆகியோரை பார்த்து பெருமை கொள்ளும் இந்திய ஊடகங்கள் ஜோஹ்ரான் மம்தானி பற்றி பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாதது கவனம் பெற்றிருக்கிறது.
ஏன் இந்த பாகுபாடு? ஜோஹ்ரான் மம்தானியை கொண்டாடுவதில் என்ன சிக்கல்கள் இருக்கிறது? என்பது குறித்த கேள்விகள் எழுந்திருக்கின்றன. போதாத குறைக்கு டிரம்ப் இவரை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கியிருக்கிறார். இதற்கான காரணங்கள் குறித்து இந்த செய்தி அலசுகிறது.

33 வயதான, ஸ்டைலான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பணக்கார நகரத்தை ஆளப்போகிறார் என்ற செய்தி கேட்பதற்கு உற்சாகமாக இருந்தாலும், வட இந்திய மீடியாக்களில் இந்த பெயர் பெரிய அளவில் அடிப்படவில்லை. காரணம் இவர் இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. அதாவது நெதன்யாகுவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை இவர் கொண்டிருக்கிறார். நெதன்யாகுவை 'இன அழிப்பாளர், போர் குற்றவாளி' என்றெல்லாம் இவர் விமர்சித்து வருகிறார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்காவும், இந்தியாவும் ஆதரவளித்து வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு வலதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதால், அதே கொள்கையை தீவிரமாக பின்பற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருகிறது. மம்தானி இந்த கொள்கைகளை விமர்சிப்பதால், சில ஊடகங்கள் மம்தானி வெற்றியை அவ்வளவாக ரசிக்கவில்லை.
இதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த மம்தானியிடம் நியூயார்க்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேரணியை நடத்துகிறார் எனில், நீங்கள் பங்கேற்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கு பதிலளித்த மம்தானி, "பங்கேற்க மாட்டேன். நான் இங்கே ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதாவது, என் தந்தையின் குடும்பம் இந்தியாவின் குஜராத்தில் இருந்து வந்தது. அவர் குடும்பம் முஸ்லிம். நான் ஒரு முஸ்லிம். நரேந்திர மோடி, குஜராத்தில் முஸ்லிம்களை பெருமளவில் படுகொலை செய்யத் திட்டமிட உதவினார்.
எந்த அளவுக்கு என்றால், இப்போது குஜராத்தி முஸ்லிம்கள் என்ற ஒரு இனம் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. நான் ஒரு குஜராத்தி முஸ்லிம் என்று நான் யாரிடமாவது கூறினால், அப்படி ஒருவர் இருக்கிறாரா என்பதே அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது, நாம் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பார்க்கும் அதே விதத்தில் பார்க்க வேண்டிய ஒருவர். இவர் ஒரு போர்க் குற்றவாளி" என்று கூறியிருந்தார்.
உச்சநீதிமன்றம் கடந்த 2022ல், குஜராத் கலவரத்திற்கும் நரேந்திர மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும் இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை மம்தானி முன்வைத்திருப்பதால் சில ஊடகங்கள் மம்தானியின் வெற்றியை பெரிய அளவில் பேசு பொருளாக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications