காசா மீது இடி இறக்கிய கமலா ஹாரிஸ்.. அதிபரானால் இதைத்தான் செய்வாரா! இஸ்லாமிய நாடுகளுக்கு வார்னிங்?
நியூயார்க்: அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், “நீங்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்ரேலுக்கான ஆயுத சப்ளையை நிறுத்துவீர்களா?” என்று கமலா ஹாரிஸிடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு அவர் அளித்த பதில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு -இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது.
இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.
இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
சூழல் இப்படி இருக்கையில் காசாவில் மீண்டும் போலியோ அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது போர் தொடங்கியதிலிருந்து 90% காசா மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. எனவே தொற்று நோய்கள் அதிகரித்துள்ளன. மறுபுறம் காசா குழந்தைகளிடையே போலியோ நோய் பரவல் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா, ஐநா கூறியுள்ளது. எனுவே போர் நிறுத்தம் குறித்த கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன.
இப்படி இருக்கையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இஸ்ரேலுக்கான ஆயுத சப்ளை குறித்து பேசியிருக்கிறார். சிஎன்என் செய்து ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
இஸ்ரேலுக்கு அயுதங்களை வழங்க கூடாது என அமெரிக்காவில் சமீப நாட்களில் சில குரல்கள் எழுந்துள்ளன. இது குறித்து செய்தியாளர், “நீங்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால்.. இஸ்ரேலுக்கான ஆயுத சப்ளையை நிறுத்திவிடுவீர்களா?” என்று கேட்டார். இதற்கு கமலா ஹாரிஸ் நேரடியாக பதிலளிக்கவில்லை. மாறாக கடந்த வாரம் சிகாகோவில் நடந்த, ஜனநாயக கட்சி மாநாட்டில், கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையை சுட்டிக்காட்டி பதிலளித்தார்.
அதாவது, “இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அந்நாடு தன்னைத் தானே தற்காத்துக் கொள்வது குறித்து அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது.
இதில் சந்தேகத்திற்கு இடம் கிடையாது. இது மாறப்போவதில்லை” என்று அறிக்கை கூறியிருந்தது. இதனைதான் ஹாரிஸ் கூறியுள்ளார். கடந்த சில நாட்ளாக போரை நிறுத்துகிறோம் என அமெரிக்கா பேசி வந்திருந்த நிலையில்.. கமலா ஹாரிஸ் இப்படி கூறியிருப்பது இஸ்லாமிய நாடுகளிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளையெல்லாம் ஈரான் ஒருங்கிணைத்து வருகிறது. இதுநாள் வரை அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்த சவுதி அரேபியா, அல்-அக்ஸா விவகாரத்தில் ஈரானுக்கு நெருக்கமாக பேசியிருக்கிறது. அதாவது இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி பகுதியில் யூதர்கள் பிரார்த்தனை கூடம் கட்ட இஸ்ரேல் முயன்று வருகிறது. இந்த முயற்சிக்கு வழக்கம் போல அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துவிட்டன. ஆனால், சவுதி வாயை திறக்காது என்று சொல்லப்பட்டது. அப்போதுதான் எதிர்பாராத விதமாக சவுதியும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
சவுதியின் இந்த இணக்கத்தை.. கமலா ஹாரிஸின் பேச்சு மேலும் உறுதியாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை சவுதியும் அவ்வளவாக ரசிக்கவில்லை.












Click it and Unblock the Notifications