83 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு.. குன்னூரில் கொட்டி தீர்த்த கனமழை! மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளம்!
நீலகிரி: கடந்த 83 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று காலை குன்னூரில் மழை பதிவாகி இருக்கிறது. இன்று ஒரே நாளில் குன்னூரில் 261 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது.
இதற்கு முன்னர் கடந்த 1943ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதியன்று குன்னூரில் 196.6 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது. இதுவே குன்னூரில் ஜனவரி மாதம் பெய்த மிகப்பெரிய மழையின் அளவாக இருந்தது. ஆனால், தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது.

கனமழை காரணமாக குன்னூரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. வாகனங்கள் சேதமடைந்திருக்கின்றன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. குன்னூரில் இவ்வளவு மழை பெய்வதற்கு அதன் அமைவிடமும் முக்கிய காரணமாகும். அதாவது குன்னூர் கிழக்கு நோக்கிய பள்ளத்தாக்கில் அமைதிந்திருககிறது. எனவே வங்கக்கடலிலிருந்து வரும் ஈரப்பதம் மிகுந்த கிழக்கு காற்று இந்த மலையில் மோதி மேலெழுந்து, விரைவாக குளிர்வடைந்து மழையாக பொழிகிறது.
குன்னூர் மட்டுமல்ல, தமிழகத்தின் வேறு சில மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டியிருக்கிறது. தென்காசியில் மிக அதிக கனமழை பெய்திருக்கிறது. கடனாநதி அணையில் சமார் 239 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
கனமழை காரணமாக குற்றாலத்தின் ஐந்தருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தேனியிலும் மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்திருக்கிறது. பில்லூர் அணை அடிவாரத்தில் 80 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. எனவே டிரக்கிங் செல்பவர்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று மதியம் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில், "ஜன.3ம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜன.4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜன.6ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜன.7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications