தவெக மாநாட்டில் குன்னூர் இளைஞர் பலி! “நெல்லை சஜி மாதிரி விட்டுடாதீங்க விஜய்”! கதறும் உறவினர்கள்!
நீலகிரி: மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்க சென்ற குன்னூர் இளைஞர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இளைஞருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட தாய், 10வது படிக்கும் தங்கை, வயதான தந்தை ஆகியோர் இருக்கின்றனர். அவர்களை யார் பார்த்துக்கொள்வார் என இளைஞரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளைஞர் ரோஷன். இவர் தீவிரமான விஜய் ரசிகர். இந்நிலையில் மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருக்கிறார்.

நேற்று மதியம் 3.30 மணிக்கு மாநாடு தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் மாநாடு நடக்கும் பகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் குவிய தொடங்கினர். நேற்று காலை இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. ஆனால் தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என்று சொல்லப்பட்டது.
போதுமான குடிநீர் கிடைக்காததால் மாநாட்டு திடலிலேயே 60க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். இவர்களுக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றிருந்த இளைஞர் ரோஷன் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ரோஷினின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர், தந்தை குடிக்கு அடிமையானவர் என்றும் 15 வயது தங்கை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரோஷின் தாத்தா கூறுகையில், "மாநாட்டு சென்ற ரோஷன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரது அம்மாவையும், தங்கையையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். இப்போது இவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல சென்னையிலிருந்து மதுரை மாநாட்டுக்கு வந்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார். இதற்கு முன்னதாக மாநாட்டுக்கு பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி மற்றொரு இளைஞர் பலியானார். இவர்களுக்கான இழப்பீடு என்ன என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றன. உயிரிழந்தவர்கள் சாதாரண தொண்டர்கள்தான். ஆனால் கடந்த மார்ச் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சஜி உயிரிழந்தபோது வெறும் இரங்கல் தெரிவித்ததோடு விஜய் நிறுத்திக்கொண்டார் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
மார்ச் மாதம் சென்னையில் தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தொண்டர்களுடன் சஜி திருநெல்வேலியில் இருந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இவரது பலிக்கு விஜய் இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால் இழப்பீடு ஏதும் வழங்கவில்லை.
அப்படி குன்னூர் இளைஞர் ரோஷனையும் விட்டு விட வேண்டாம் என தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். ரோஷன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரோஷன் மரணத்திற்கு மட்டுமல்லாது, சென்னை இளைஞரின் குடும்பத்திற்கும், பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கும் விஜய் உதவ வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.












Click it and Unblock the Notifications