ஒரே பாசமழை.. “உங்க ஒவ்வொருத்தர் பேரும் என் இதயத்தில்..” நீலகிரி தொகுதிக்கு சென்ற ஆ.ராசா உருக்கம்!
நீலகிரி : "நீலகிரி தொகுதி மக்கள் ஒவ்வொருவரின் பாதம் தொட்டு வணங்க கடமைப்பட்டுள்ளேன். உங்களுடைய பெயர்கள் எல்லாம் எனது இதயத்தில் உள்ளது." என திமுக எம்.பி ஆ.ராசா உருக்கமாகப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய ஆ.ராசா, வரும் தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமர். அவர் தான் மோடியை வீட்டிற்கு அனுப்ப போகிறார் எனப் பேசியுள்ளார்.
இந்துக்கள் பற்றி திமுக எம்.பி ஆ.ராசா பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், பாஜகவினர் பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே ஆ.ராசா மீண்டும் திமுக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து நீலகிரிக்கு காரில் வந்தார் ஆ.ராசா. ஒருபக்கம் பாஜகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், அன்னூர் பகுதியில் திமுகவினரும், பொதுமக்களும் ஆ.ராசாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நீலகிரி வந்த ஆ.ராசா
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். திமுக துணை பொதுச் செயலாளராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு கோவைக்கு வருகை தந்த ஆ.ராசாவை கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க தி.மு.கவினரும், திராவிட இயக்கத்தினரும் வரவேற்றனர். பின்னர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக நீலகிரி செல்கிறார் ஆ.ராசா.

பாஜக போராட்டம்
திமுக எம்.பி ஆ.ராசா சில வாரங்களுக்கு முன்னர் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி சில கருத்துக்களை ஒரு விழாவில் பேசியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு கருப்பு கொடி காட்ட பாஜகவினர் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் கூடினர். இதனை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

ஆ.ராசாவுக்கு வரவேற்பு
நீலகிரி எம்பி ஆ.ராசா இரண்டாவது முறையாக தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக நீலகிரி தொகுதிக்கு வருகை புரிந்த ராசாவுக்கு அன்னூர் கைகாட்டியில் 2000க்கும் மேற்பட்ட திமுகவினர், பொதுமக்கள் கூடி வரவேற்பு அளித்தனர். ஆ.ராசாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

நன்றி தெரிவித்த ராசா
அப்போது பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா, "திமுக துணை பொதுச் செயலாளராக மீண்டும் என்னை தேர்ந்தெடுத்ததற்காக தமிழ் இனத்தின் தலைவரும் திராவிட மாடலை இந்தியாவுக்கே எடுத்துக் கூறி இந்தியாவின் இறையாண்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதம் தொட்டு வணங்குகிறேன்
இப்போது பெரிய பொறுப்பை எனக்கு வழங்குவதற்கு காரணமாக உள்ள தொகுதி மக்கள் ஒவ்வொருவரின் பாதம் தொட்டு வணங்க கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டு, நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால் தலைமைக் கழகம் எனக்கு இந்த பதவியை வழங்கி இருக்காது. எனவே தலைமைக் கழகத்திற்கும், வணக்கத்திற்குரிய தலைவருக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

எனது இதயத்தில் உள்ளது
உங்களை மீண்டும் மீண்டும் வணங்க கடமைப்பட்டு இருக்கிறேன். உங்களுடைய பெயர்கள் எல்லாம் எனது இதயத்தில் உள்ளது. என்றைக்கும் எம்.பி ஆக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அன்னூருக்கு வந்திருக்கிறேன். பெரம்பலூர் மாவட்டம் எனது பிறந்த மாவட்டமாக இருந்தாலும், அதைவிட சிறந்த இடமாக நீலகிரி தொகுதியை கருதுகிறேன். என்றென்றும் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்.

ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர்
பிற்படுத்தப்பட்ட மக்களின் இயக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கம், 2000 ஆண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட அனைவருக்குமான இயக்கம். இந்த இயக்கத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை பிரதமராக விரும்புகிறாரோ? யாரை கை காட்டுகிறாரோ ? அவர் தான் பிரதமராக வரப்போகிறார். அவர் தான் மோடியை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications