திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க.. சங்கி யாருனு வித்தியாசம் தெரியல! ஆ ராசாவால் சர்ச்சை
நீலகிரி: ‛‛கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி எவன் திமுககாரன் என்ற வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன் திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்கள்'' என்று திமுக எம்பி ஆ ராசா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் ஆ ராசா. இவர் நீலகிரி தொகுதியின் எம்பியாகவும் உள்ளார். இந்நிலையில் தான் இன்று நீலகிரியில் திமுக மாணவரனி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆ ராசா பேசிய வீடியோ சர்ச்சையாகி உள்ளது.

அதாவது திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்க வேண்டாம் என்று பேசியிருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக ஆ ராசா கூறியதாவது:
கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிடவேண்டாம் என்று சொல்லவில்லை. அன்பு தான் கடவுள் என்று சொன்னாலும் கூட மனிதர்களுக்கு மனிதர் காட்டுகிற இரக்கம் தான் கடவுள் என்று சொன்னாலும், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், அண்ணா சொன்னது போல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொன்னாலும் அப்படிப்பட்ட கடவுள் மீது நமக்கு ஒன்றும் கோபம் இல்லை. வைத்து கொள்ளுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது, நீங்களும் கையில் கயிறு கட்டி, சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி எவன் திமுககாரன் என்று வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன். சாமி கும்பிடுங்கள். உங்களின் தாயார், அப்பா விபூதி தந்தால் வைத்து கொள்ளுங்கள்.
எல்லாம் முடித்த பிறகு திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க. ஏனென்றால் கொள்கை இல்லாமல் போனால் அரசியல் கட்சி அழிந்துவிடும். அதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கட்சி தான் அதிமுக. எடப்பாடி பழனிச்சாமி'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications