ஊட்டியில் சுற்றுலாப் பயணியிடம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை.. கண்ணீர் விட்டு அழுத பஞ்சாபி பெண்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் முறையான ஆவணங்கள் இன்றி 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டுவரப்பட்ட பணத்தை சுற்றுலாப் பயணிகளிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அப்போது பணத்தைத் திருப்பித் தருமாறு கண்ணீர் விட்டு பஞ்சாபி பெண் அழுத வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற போகிறது. தேர்தல் தேதி கடந்த மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக பல்வேறு நாட்களில் லோக்சபா தேர்தல் நடைபெற போகிறது. ஜூன் 4ம் தேதியே இந்தியாவை யார் ஆளப்போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். லோக்சபா தேரதல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 16 அன்று முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலங்களில் இந்தியாவின் முழு போலீஸ் உள்பட அனைத்து துறைகளின் அதிகாரமும் தேர்தல் ஆணையத்தின் வசம் வந்துவிடும்.

அரசுகள் எல்லாமே காபந்து அரசுகளாகிவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை அரசுகளால் எந்த திட்டமும் அறிவிக்கமுடியாது.. எந்த நிதியும் புதிதாக திட்டங்களுக்கு செலவு செய்ய முடியாது. தேர்தல் காலத்தில் ஏற்கனவே நடைபெறும் பணிகள் மற்றும் திட்டங்கள் மட்டுமே அப்படியே தொடரும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலங்களில் ரொக்கமாக ரூ.50000க்கு மேல் எடுத்து செல்ல அனுமதி இல்லை.. அப்படி பணத்தை எடுத்து சென்றால், உரிய ஆவணங்களை கண்டிப்பாக காட்ட வேண்டும்.. உரிய ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்..

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது.
பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டு அளிக்க தூண்டுவதனை தடுத்திடும் பொருட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும் நேர்வுகளில் மேற்படி குழுக்களால் ஆய்வின் பொழுது வாக்காளர்களைக் கவரும் வகையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் கொண்டு செல்லவேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் மேற்கண்ட இனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட இனங்களுக்கான நபர்கள் உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அறை எண்: 186-இல் உள்ள மேல்முறையீட்டு அலுவலரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.
பறிமுதல் செய்யப்படும் பொழுது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மேற்சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது,
இந்த உத்தரவினை இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்கள்.. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் முறையான ஆவணங்கள் இன்றி 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டுவரப்பட்ட பணத்தை சுற்றுலாப் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது பணத்தைத் திருப்பித் தருமாறு கண்ணீர் விட்டு பஞ்சாபி பெண் கதறி அழுதார்.. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேர்தல் நடத்தை விதிமுறையின் போது 50000க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லக்கூடாது என்பது பொதுவான ரூல் தான் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதனிடையே 50000 என்பதை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும்,50000 பணம் என்பது சர்வ சாதாரணமாக இப்போது எல்லாருமே எடுத்த சென்று வேண்டிய பொருட்களை வாங்குவார்கள்.. அதேபோல் கடைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் ஊழியர்களும் இந்த பணத்துடன் வருவார்கள்.. எனவே 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுற்றுலாவிற்கு ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு வருவோர் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது என்ற அச்சம் உள்ள காரணத்தால், அவர்கள் மொத்தமாக பணத்தை எடுத்துக்கொண்டு தான்று சுற்றுலா வருகிறார்கள். அப்படி வருபவர்களிடம் பறக்கும் படையினர் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications