57 பேர் உயிரை காப்பாற்றிய வாகன ஓட்டி: பின்னாடி மட்டும் வரலன்னா? ஊட்டி பஸ் தீ விபத்தில் நடந்தது என்ன?
நீலகிரி: ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ பிடித்த விபத்தில் 57 மாணவ மாணவிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். பின்னால் வந்த வாகன ஓட்டி, தீயை கவனித்து வேகமாகச் சென்று டிரைவரிடம் கூறியதால் தான் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கூடலூர் செல்லும் மலைப்பாதைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசியில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன், பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வடு ஆறுவதற்குள், சுற்றுலா பேருந்து ஒன்று மலைப்பாதையில் பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து நீலகிரிக்கு 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று வந்துள்ளது. ஊட்டியில் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் நாமக்கல்லுக்கு புறப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் வந்த போது, பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் திடீரென தீப் பற்றி உள்ளது.

இதையடுத்து ஓட்டுநர், உடனடியாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளை பேருந்தில் இருந்து பத்திரமாக கீழே இறக்கியுள்ளனர். டயரில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. உடனடியாக இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிகாலையில் மலைப்பகுதியில் பேருந்தில் தீப்பிடித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். மாணவர்கள் உயிர் தப்பியதற்கு காரணம், பேருந்தின் டயரில் தீப்பிடித்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரி மாணவ மாணவிகளுடன் பேருந்து, மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் தூரிப்பாலம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது பேருந்தின் வலது பின்புற டயரில் தீப்பற்றியுள்ளது. இதை கவனிக்காமல் ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை இயக்கி வந்துள்ளார். அப்போது பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கள் வாகனத்தில் ஹாரன் சத்தம் எழுப்பியபடி, வேகமாக இயக்கி பேருந்தை முந்திச் சென்று ஓட்டுநரிடம் தீ விபத்து குறித்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்தே, ஓட்டுநர் பேருந்தை உடனடியாக சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மாணவர்களை சத்தம் போட்டு எழுப்பியுள்ளார். அலறி அடித்துக்கொண்டு மாணவர்கள் எழுந்து, கூச்சலிட்டு, கடுமையான சோர்வுடன் தூங்கிக் கொண்டிருந்த மற்ற மாணவர்களையும் எழுப்பி உடனடியாக பேருந்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாகவே எந்த உயிர் சேதமும் இன்றி தப்பியுள்ளனர்.
கல்லூரி மாணவர்களுடன் சென்ற பேருந்துக்கு பின்னால் அந்த நேரத்தில் வேறு வாகனம் வந்திருக்காவிட்டால், தீப்பற்றியதை ஓட்டுநர் கவனிக்காமல் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும், அதுவும் அதிகாலை நேரம் என்பதால், மாணவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்ததால் மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்கும், நல்வாய்ப்பாக, அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications