நீல டீ ஷர்ட்.. கோவிலுக்கு சென்றுவிட்டு கோர்ட்டுக்கு வந்த சயான்.. கோடநாடு வழக்கில் அடுத்த பூகம்பம்?
ஊட்டி: கோடநாடு விவகாரம் தொடர்பாக சயான் கொடுத்த வாக்குமூலமும், கடைசி கட்டத்தில் தனபால் என்ற நபர் கொடுத்த வாக்குமூலமும் சிக்கலான இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சயான் வரும் நாட்களில் இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவார் என்றும் கருதப்படுகிறது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இங்கு அடிக்கடி தங்குவது வழக்கம்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பாதுகாப்பற்று இருந்த இந்த பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. உள்ளே இருந்த முக்கியமான ஆவணங்களை எடுப்பதற்காக இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாகவும் அது காவலாளியின் கொலையில் முடிந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

கொலை
2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர். இவர் கொள்ளை சம்பவத்திற்கு பின் விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார். கனகராஜின் மரணத்தில் அப்போதே சயானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட பின் சாட்சியங்களை மறைப்பதற்காக இந்த விபத்து நடத்தப்பட்டதா என்று சயான் அப்போதே சந்தேகம் அடைந்தார்.

சயான்
அதன்பின் சயான் இதேபோன்ற விபத்து ஒன்றில் இருந்து தப்பித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய வேறு சிலரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்ட நிலையில்தான் சயான் போலீஸ் தரப்பில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து வாக்குமூலம் கொடுக்க தொடங்கினார். இது போன்ற சம்பவங்கள் தொடர கூடாது என்பதால் இவர் அப்ரூவராக மாறி உள்ளார். இந்த நிலையில்தான் சரியாக ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இந்த வழக்கில் வேகம் காட்ட தொடங்கியது. அதோடு குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த தொடங்கியது. மறுவாக்குமூலம் முதலில் இருந்து வாங்கப்பட்டது.

முக்கிய வாக்குமூலம்
இதில் பெயிலில் வெளியே வந்து ஊட்டியில் இருக்கும் சயானிடம் ஏற்கனவே ஊட்டி போலீசார் வாக்குமூலம் வாங்கிவிட்டனர். அதில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கனகராஜ் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதாக, சயான் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. இவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இன்று ஊட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று கோர்ட்டுக்கு சயான் நீல நிற டீ ஷர்ட்டில் பாதுகாப்போடு கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தார். இவர் இன்று முக்கியமாக வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒத்திவைப்பு
ஆனால் இன்று கோர்ட்டில் விசாரணை நடத்தப்படாமல் வழக்கு செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று வழக்கில் போலீசார் கூடுதல் வாக்குமூலம் ஒன்றையும் கொண்டு வந்தனர். அது தனபால் என்ற நபர் கொடுத்த வாக்குமூலம். இந்த தனபால் என்பவர் கனகராஜின் சகோதரர். கனகராஜ் விபத்தில் பலியான பின் அதை சந்தேகத்திற்கு உரிய விபத்து என்று முதலில் சொன்னது தனபால்தான். இவரின் புகாருக்கு பின்பே கனகராஜ் மரணம் கொலையாக இருக்குமோ என்ற கேள்விகள் எழுந்தது. ஊட்டியில் சில நாட்களுக்கு முன்பு இவரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

இரண்டு வாக்குமூலம்
இதில் கனகராஜ் மரணம் குறித்தும் அவர் கொள்ளை சம்பவத்திற்கு முன் யாரிடம் பேசினார், யாரை எல்லாம் சந்தித்தார் என்று தனபால் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது. இதில் யாருக்கு எதிராக தனபால் பேசினார் என்று தெரியவில்லை. இவர்கள் இரண்டு பேரின் வாக்குமூலம் + மனோஜிடம் எடுக்கப்பட்ட வாக்குமூலம் ஆகியற்றை வைத்து இந்த வழக்கில் போலீஸ் முன்னே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்குமூலங்கள், இனி நடக்கும் உள்ள விசாரணைகள் இந்த வழக்கில் பல பூகம்பங்களை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை மேலும் விசாரிக்கவும், வழக்கில் புதிய பெயர்களை சேர்க்கவும் போலீஸ் முயற்சி செய்து வருகிறது. செப்டம்பர் 2ம் தேதி விசாரணையில் இதற்கான கோரிக்கை வைக்கப்படும்.
Recommended Video

என்ன இருக்கிறது
சயான் மற்றும் தனபாலிடம் வாங்கப்பட்ட வாக்குமூலம் என்ன என்று முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை, இன்று கோர்ட் வாதம் நடந்து இருந்தால் அதைப்பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கும். ஆனால் வழக்கு செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டதால் இனி வரும் நாட்களில்தான் சயான் பேசியது என்ன என்ற விவரங்கள் வெளியாகும். போலீசார் சயான் மற்றும் தனபால் வாக்குமூலத்தை முக்கியமாக கருதுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்களிடம் கூடுதல் விசாரணைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications