கோத்தகிரியை கலக்கும் சித்ரா.. பழங்குடி கிராமங்கள் போற்றும் அரசு பள்ளி ஆசிரியை.. நீலகிரியில் அற்புதம்
ஊட்டி:நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பழங்குடி கிராமங்களுக்கு சென்று பாடம் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியையை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.
அறியாமை, சாதி மத வேற்றுமை மற்றும் வறுமையை அகற்ற கல்வி தான் இந்த உலகின் ஆகச்சிறந்த ஆயுதம் என்பதை உணர்ந்த பலர், இன்று படித்து முன்னேறி வருகிறார்கள். சரியாக படிக்காத மக்கள் வறுமையில் சிக்குவதுடன், பழமைவாதம் மற்றும் சாதி மாத வேறுபாட்டில் சிக்கி உள்ளார்கள்.

வறுமையை வென்று, அறியாமையை வென்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக குக்கிராமங்களில் மட்டுமல்ல மலைகிராமங்களில் கூட கல்வியை போதிக்க அரசு அதிக அக்கரை காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மாறி மாறி ஆண்டு வரும் திமுக, அதிமுக இரண்டுமே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. இதனால் இன்றைக்கு கல்வியில் தமிழ்நாடு சிறந்து வருகிறது.
தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க அரசு மட்டும் காரணமல்ல.. தன்னலம் கருதாமல், பேருந்து வசதிகள் கூட இல்லாத மலைகளில் தங்கி, கல்வி பயிற்றுவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் முக்கிய காரணம். கடந்த 30 வருடங்களில் தமிழ்நாடு அடைந்த முன்னேற்றத்திற்கு தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் முக்கிய காரணம் ஆவர். பல குழந்தைகள் இன்றைக்கு அரசு அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவும், ஐஏஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் வலம் வர அரசு பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு முக்கிய காரணம் ஆகும்.
சரி, விஷயத்திற்கு வருவோம்.. அப்படி ஒரு அரசு பள்ளி ஆசிரியை பற்றித்தான் பார்க்க போகிறோம்.. கோத்தகிரி அருகே அரவேனு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. இங்கு பணியாற்றி வருபவர் ஆசிரியை சித்ரா. இவர் தனது பள்ளி குழந்தைகள் விடுமுறை எடுக்காமல், தவறாமல் பள்ளிக்கு வந்து கல்வி கற்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். சித்ரா, மலைப்பகுதியில் வசிப்பவர் அல்ல.. தினமும் சமவெளிப் பகுதியில் அதாவது மேட்டுப்பாளையத்திற்கு கீழிருந்து தினமும் பள்ளிக்கு சென்று, பாடங்களை ஆடல் பாடல்களுடன் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதனிடையே உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வரும் சில குழந்தைகள், பள்ளிக்கு வராமல் இருப்பதை கண்ட ஆசிரியை சித்ரா, ஒரு மணி நேரம் நடை பயணமாக தனது பள்ளிக்கு உட்பட்ட தாளமொக்கை, செம்மானாரை, கோழித்தொரை உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்கு சென்று வருகிறார். அங்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் தேவையை பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி பள்ளிக்கு அனுப்புமாறு வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிக்கடி செய்து வருகிறார். இதுமட்டுமின்றி வீட்டில் இருந்தே 1-ம் வகுப்பு படித்து வரும் முத்துலட்சுமி என்ற குழந்தைக்கு மாதம் இருமுறை வீட்டிற்கு நேரில் சென்று பாடங்களை சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இதனிடையே அந்த குழந்தை பள்ளிக்கு அனுப்பி விடுவதாக பெற்றோர் ஆசிரியையிடம் கூறியுள்ளார்கள். சேவை மனப்பான்மையுடன் பழங்குடியின குழந்தைகளுக்காக கிராமங்களுக்கு சென்று பாடம் எடுத்து வரும் ஆசிரியையின் முயற்சியை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணராஜ் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இவரை போன்று பல ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற ஆசிரியர்களால் தான், கல்வி போய் சேர வேண்டிய அத்தனை இடங்களுக்கும் நிச்சயம் போய் சேருகிறது.












Click it and Unblock the Notifications