நில அபகரிப்பு சர்ச்சையில் அதிமுக மாவட்டச் செயலாளர்! குளு குளு ஊட்டியில் அனல் பறக்கும் புகார்!
நீலகிரி: நீலகிரி மாவட்ட அதிமுகச் செயலாளர் கப்பச்சி வினோத் மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அதிமுக மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் முதல்வர் தனிப்பிரிவு வரை மனு கொடுத்துள்ளதால் இந்த விவகாரத்தை மிக சீரியஸாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது காவல்துறை.
இதனிடையே நில அபகரிப்பு புகாருக்கு உள்ளாயிருக்கும் கப்பச்சி வினோத் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்ட அதிமுகச் செயலாளராக உள்ள கப்பச்சி வினோத்தை பொறுத்தவரை கட்சியில் படிபடியாக முன்னேறியவர். அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகியாக இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பரிபூரண ஆசியால் இன்று மாவட்டச் செயலாளராக இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் குன்னூர் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கான தேர்தல் செலவுகளை கூட எஸ்.பி.வி.டீமே கவனித்துக் கொண்டதாக கூறப்பட்டது.

மவட்டத்தில் அரசியல்
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோரை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் செய்து வரும் கப்பச்சி வினோத், தற்போது வாலண்டியராக வந்து வம்பில் சிக்கியிருக்கிறார். அதாவது இவரும் இவருடைய சகோதரரும் இணைந்து அவர்களது உறவினரான ரீனா என்பவரது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக புகார் எழுந்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு என புகார் ஓலைகள் சென்றதால் அது தொடர்பான விசாரணையும் சென்று கொண்டிருக்கிறது.

நில அபகரிப்பு
கடந்த 2011-ம் ஆண்டு நில அபகரிப்பு புகார்களுக்கு உள்ளான திமுகவினர் மீது வழக்கு மேல் வழக்குப்பதிந்து நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக அலையவிட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இந்தச் சூழலில் பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்து நடைபெற்று வரும் நிலையில், முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் மீதே நில அபகரிப்பு புகார் எழுந்திருக்கிறது.

முன்னாள் அமைச்சர்கள்
இதுவரை வேலைவாங்கி தருவதாக பணமோசடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், என முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே வழக்குகள் பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் நில அபகரிப்பு சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications