ராத்திரி மது போதை மப்பில்.. ஊட்டி கணேசன் செஞ்ச வேலை.. அதுவும் சிஎம் ஸ்டாலின் வீட்டுக்கே!
ஊட்டி: தமிழக முதல்வர் ஸ்டாலினின் வீடு உள்பட ஏழு இடங்களில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஊட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 108 அவசர ஆம்புலன்ஸ் அவசர சேவை மையம் செயல்பட்டு வரும் நிலையில், அந்த மையத்திற்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அங்கு பணியில் இருந்த ஊழியர் போனை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசிய மர்ம நபர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீடு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு இடம் உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சில மணி நேரத்தில் வெடிக்கும் என்று கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியான 108 தகவல் கட்டுப்பாட்டு மைய ஊழியர், அவரிடம் நீங்கள் யார், எந்த ஊர் என்று விசாரித்திருக்கிறார். ஆனால் அதற்குள் அந்த நபர் தனது செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து தகவல் கட்டுப்பாட்டு ஊழியர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து ஊட்டி போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும் சென்னையில் உள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடங்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையும் நடத்தினர். சோதனையில் குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது உறுதியானது
இதையடுத்து ஊட்டி போலீசார் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு சென்று போன் வந்த செல்போன் நம்பர் யாருடையது? எங்கிருந்து வந்தது என விசாரணையை தொடங்கினார்கள். ஊட்டி போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போனில் கூறியது ஊட்டி அருகே உள்ள தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பது உறுதியானது.
இதையடுத்து இன்று காலை ஊட்டி தாம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்த கணேசனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்த கணேசன், போதை தலைக்கேறிய நிலையில், 108 அவசர சேவை மையத்திற்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறினார்.இதையடுத்து கணேசனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications