ரூ 822 கோடி குத்தகை பாக்கி! ஊட்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சீலை வைத்த வருவாய்த் துறை
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ரேஸ் கிளப் ரூ 822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குத்தகை பாக்கி 1978 ஆம் ஆண்டு முதலே கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மெட்ராஸ் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்தது. வருவாய் துறையினருக்கு சொந்தமான இடத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது.

வருவாய்த் துறைக்கு செலுத்த வேண்டிய குத்தகை பணத்தை 1978 ஆம் ஆண்டு முதல் கட்டாமல் இருந்துள்ளது. இதுவரை ரூ 822 கோடி வரை குத்தகை தொகை நிலுவையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால் அந்த நோட்டீஸுக்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் காவல் துறையினர் உதவியுடன் வருவாய்த் துறை அலுவலர்கள் நிலத்தை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். குத்தகை பாக்கி தொடர்பான பிரச்சினையில் வருவாய்த் துறையினர் ரேஸ் கோர்ஸ் மேலாளரிடம் நோட்டீஸ் வழங்கி சீல் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ரேஸ் கோர்ஸை சுற்றி ஆங்காங்கே இந்த நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது என்று பேனர் வைத்துள்ளனர். ரேஸ் கிளப்புடன் குதிரை பந்தயம் மைதானத்திற்குள் உள்ள அலுவலகங்களும் சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications