இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? ஸ்டாலினால் சொல்ல முடியுமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீலகிரி: எங்கு பார்த்தாலும் இந்தியா கூட்டணி.. இந்தியா கூட்டணி என்று பேசும் ஸ்டாலினால், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா?, இந்தியா கூட்டணியிலேயே ஒற்றுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நீலகிரி காரமடையில் அதிமுக வேட்பாளர் லொகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொன்விழா கண்ட கட்சி அதிமுக. 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக. இன்றைக்கு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு அதிமுகவே காரணம். 30 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி செய்த காரணாமாகவே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஆனால் ஸ்டாலின் அதிமுக ஆட்சியை இருண்ட காலம் என்கிறார். ஸ்டாலினின் 3 ஆண்டு கால ஆட்சி தான் மக்கள் விரோத ஆட்சி. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. செய்தி தாளை பார்த்தாலே தெரியும். இப்படிப்பட்ட ஆட்சியை நடத்தும் ஸ்டாலின் எங்க ஆட்சியை பார்த்து இருண்ட ஆட்சி என்கிறார். எங்களுடைய ஆட்சி சிறந்த ஆட்சி. 10 ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் சொல்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும், திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்புவோம் என்ற குரலே ஒலித்துகொண்டு இருக்கிறது.
இன்றைக்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. இதில், நீட் தேர்வை ரத்து செய்வோம் .. ரத்து செய்வோம் என்று சொல்கிறது திமுக. ஆனால் திமுகவும் காங்கிரசும் சேர்ந்து தான் நீட்டை கொண்டு வந்தாங்க. அதை வேண்டாம் என்று போராடியது தான் அதிமுக. ஒரு பொய்யை பலமுறை சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறது திமுக. திமுகவின் பொய்யும் புரட்டும் இந்த தேர்தலில் எடுபடாது.
எல்லா துறையிலும் ஊழல்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. ஏனென்றால் அவர்களுடைய சகாக்களே லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கிறாங்க. பிறகு எப்படி கட்டுப்படுத்த முடியும். திமுக ஆட்சி அப்புறப்படுத்த வேண்டிய ஆட்சி. இப்போது விட்டுவிட்டீர்கள் என்றால் பிறகு கட்டுப்படுத்த முடியாது. இன்றைக்கு வாரிசு அரசியல். கருணாநிதி அப்புறம் ஸ்டாலின். இப்போ உதயநிதி ஸ்டாலின். வாழை மரத்தின் கிளைக்கன்று போல வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் போடும் ஓட்டு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்க வேண்டும். என்ன தகுதி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினுக்கு. ஸ்டாலினுக்கே ஒரு தகுதியும் கிடையாது. பொம்பை முதல்வர். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தவிர.
ஏன் திமுகவில் வேற ஆளே இல்லயா?... மூத்த அமைச்சர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது திமுக தலைவராக அறிவிக்கலாமே.. திமுகவே ஒரு குடும்பம் என்று சொல்கிறார் ஸ்டாலின். அப்போது, அந்த குடும்பத்தில் இருந்து யாரையாவது முதல்வராக அறிவிக்க வேண்டியது தானே.
எங்கு பார்த்தாலும் இந்தியா கூட்டணி.. இந்தியா கூட்டணி என்று சொல்கிறார். இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என்று அவரால் சொல்ல முடியுமா இப்போது? இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் ஒற்றுமை இல்லை. அதிமுக பதவிக்கு ஆசைப்படவில்லை, அதிகாரம் தேவையெனில் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்போம்.
திமுக கட்சி கிடையாது. திமுக கார்பரேட் நிறுவனம். மக்கள் தங்கள் உரிமைக்காக போராடி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் நீங்கள் நலமா என்று கேட்கிறார். கல்விக்கடன் ரத்து செய்தது அதிமுக. இதனை திமுக நிறுத்திவிட்டது. தாலிக்கு தங்கம் ஒரு பவுண் வழங்கினோம். இப்போது ஒரு பவுன் 50 ஆயிரம் ரூபாய். பல லட்சம் பெண்களுக்கு கொடுத்தோம். இந்த தாலிக்கு தங்கம் திட்டத்தையும் ரத்து செய்தது திமுக. ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்.. வாக்களிப்போம் இரட்டை இலைக்கு.. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications