பாஜக தலைவர்களுடன் பேசி வருகிறோம்.. சீட் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.. ஓபிஎஸ் பரபர பேட்டி!
சென்னை: பாஜக கூட்டணியில் தொடர்கிறோம் என்றும், கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஓபிஎஸ் தரப்பினரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், ஓபிஎஸ், அதிமுக கட்சிக் கரை இல்லாத வேட்டியையே அணிந்து வருகிறார். ஓபிஎஸ் காரிலும் அதிமுக கொடி தற்போது பயன்படுத்தப்படுவதில்லை.
நாளை ஓபிஎஸ் ஆலோசனை: இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்படுத்துவது, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் விவாதிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னை எழும்பூரில் நடைபெறும் என பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் பிரஸ் மீட்: இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக மாநிலத் தலைவருடனும், மேல்மட்டத் தலைவர்கள் உடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. காலம் கனிந்து வருகிறது, பொறுமையாக இருங்கள், நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும். நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்து உரிய தீர்மானங்கள் மூலமாக வெளிப்படுத்துவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்கிறோம். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக நாங்களும் அறிவிக்கவில்லை, அவர்களும் அறிவிக்கவில்லை. நல்லாட்சி தொடர பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications