மோர்பி பால விபத்து.. உயர்நீதிமன்றம் எழுப்பிய 'நறுக்' கேள்வி.. இதை கவனிச்சீங்களா? ப.சிதம்பரம் சுளீர்
காந்திநகர்: குஜராத் 'மோர்பி' தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அம்மாநில உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்து முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
வரும் 1ம் தேதி குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் ஆளும் பாஜக அரசு மீது சில 'நறுக்' கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனை எதிர்க்கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
காங்கிரஸ் இப்பிரச்னையை அரசியலாக்காது என்று கூறியிருந்தாலும், அக்கட்சியின் மூத்த தலைவர் இது குறித்து வெளிப்படையாக பேசி விமர்சித்திருப்பது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப.சிதம்பரம்
குஜராத் மாநில தேர்தலுக்கு வெறும் 14 நாட்களே உள்ள நிலையில், அம்மாநில நீதிமன்றம் இவ்வாறு கேள்வியெழுப்பியிருப்பது ஆளும் பாஜகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்ரபம் தனது டிவிட்டர் பக்கத்தில், "குஜராத் உயர்நீதிமன்றத்தின் கேள்வியில் பல முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. அதில், வெறும் ஒன்றே கால் பக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், நிபந்தனைகள் இல்லாதது, டென்டர் இல்லாதது என பல கேள்விகள் குறிப்பிடத்தக்கது.

பரிசு
53 குழந்தைகள் உட்பட 135 உயிர்களுக்கு 'குஜராத்' கொடுத்த பரிசுதான் இந்த ஒப்பந்தம். இவ்வளவு நடந்த பிறகும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? நினைவில் கொள்ளுங்கள் மக்களே இந்த விவகாரம் தொடர்பாக யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, ராஜினாமாவும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த 2017ம் ஆண்டு குஜராத் தேர்தலில் பாஜக கடும் சரிவை எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது 'மோர்பி' பாலம் விபத்தும், இது தொடர்பாக நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளும் தேர்தல் முடிவுகளை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி
குஜராத் மாநிலம் 'மோர்பி' பகுதியில் அமைந்துள்ள 150 ஆண்டு பழமையான தொங்கு பாலம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 30ம் தேதி ஏராளமான மக்கள் பாலத்தை பார்க்க கூடியிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பாலம் அறுந்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் உயிரிழப்புகள் 100ஐ தொட்டது. பின்னர் மீட்பு பணியில் பலரை காப்பாற்ற முடிந்திருந்தாலும் 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தானாக முன் வந்து விசாரணை
இந்நிலையில் இது குறித்து அம்மாநில உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்டது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆளும் பாஜக அரசுக்கு சரமாரியான கேள்வியை எழுப்பியிருந்தது. அதாவது, "இந்த பாலத்தை பராமரிக்கும் பணியை எதன் அடிப்படையில் 'ஒரேவா குழுமத்திற்கு' கொடுத்தீர்கள்? ஏன் பராமரிக்கும் பணி குறித்து இதர நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் டென்டர் விடப்படவில்லை? ஒப்பந்தம் வெறும் ஒன்றே கால் பக்கத்திற்கு மட்டுமே இருக்கிறது. இதில் ஏன் எந்த நிபந்தனையும் இல்லை?

சரமாரி கேள்வி
முதன் முறையாக 2008-2017 வரை ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏன் அதே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கினீர்கள்? டென்டர் விடுதற்கு அதிகாரிகளால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதேபோல பாலம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை யார் சரிபார்ப்பார்கள்? என்பது குறித்து ஒப்பந்தத்தில் ஏன் எதுவும் குறிப்பிடவில்லை? பாலத்தில் செல்ல கட்டணம் வசூலித்த நிறுவனம் ஏன் அதனை முறையாக பராமரிக்கவில்லை? நகராட்சி நிர்வாகத்திலிருந்தே குளறுபடிகள் தொடங்கியுள்ளதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

உத்தரவு
இத்தனை பேர் உயிரிழந்த நிலையிலும் ஏன் பராமரிப்பு பணியை மேற்கொண்ட நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை? நகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் நீதிமன்றம் கோரிய பல விஷயங்கள் விடுபட்டுள்ளன. எனவே பாலம் தொடர்பான முக்கிய ஆவணங்களை சீலிட்ட கவரில் நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்" என தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வியெழுப்பி உத்தரவிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications