ஐரோப்பாவை விழுங்குது காட்டுத்தீ! உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் மக்கள்! இயற்கையின் கொடூர முகம்
பாரீஸ்: ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், பல நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், குரோஷியா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலையால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் பதிவான நிலையில், ஜூலை மாத தொடக்கத்திலேயே மீண்டும் வெப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. இது சூழியல் ஆர்வாளர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.
தற்போது பரவி வரும் காட்டுத்தீயால் தெற்கு ஐரோப்பாவில் மட்டும் 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. இது நியூயார்க் நகரின் மான்ஹாட்டன் பகுதியை விட சுமார் மூன்று மடங்கு பெரிய பரப்பளவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பெர்பின்யான் அருகே ஏற்பட்ட காட்டுத்தீ மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 4,600 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையான நிலையில், சுமார் 10,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ
தீ வேகமாக குடியிருப்பு பகுதிகளை நோக்கி பரவியதால் மக்கள் கடும் அச்சத்தில் இரவோடு இரவாக வீடுகளை விட்டு வெளியேறினர். "இரவு நேரத்தில் புகை வீடுகளை சூழ்ந்தது. சில மணி நேரங்களில் தீ வீடுகளுக்கு அருகில் வந்துவிட்டது. ஊராட்சி அதிகாரிகள் கதவைத் தட்டி உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்தனர். தீ பரவிய வேகம் மிகவும் அதிர்ச்சியளித்தது" என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
டூர் டி பிரான்ஸ்
பிரான்சில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற டூர் டி பிரான்ஸ் சைக்கிள் போட்டிக்கும் இந்த காட்டுத்தீ பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் மூன்றாவது கட்டம் வழக்கம்போல் நடைபெற்றாலும், பாதுகாப்பு காரணங்களால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வீரர்கள் மற்றும் அவர்களது அணியினருக்கு மட்டுமே அந்த வழித்தடத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல் பிரான்சின் ட்ரோம் மாகாணத்திலும் மற்றொரு பெரிய காட்டுத்தீயை கட்டுப்படுத்த 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
ஸ்பெயின்
கிரீஸின் வடக்கு நகரமான தெசலோனிகியில் ஏற்பட்ட காட்டுத்தீ இரண்டு தொழிற்சாலைகளை முற்றிலும் சூழ்ந்தது. இதனால் சுற்றுவட்டார மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், புகை காரணமாக வீடுகளின் ஜன்னல்களை மூடிக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஸ்பெயினின் பிரபல சுற்றுலா மையமான கோஸ்டா பிராவா பகுதியில் இரண்டு நாட்களில் மட்டும் 2,200 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. அங்கு தொடர்ந்து தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வானிலை ஆய்வு மையம்
இதற்கிடையே தெற்கு ஸ்பெயினின் ஆண்டலூசியா மற்றும் எக்ஸ்ட்ரமடூரா பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இதனால் மேலும் புதிய காட்டுத்தீகள் உருவாகும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. போர்ச்சுகலிலும் வடக்கு பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியை அழித்துள்ளது. தீ தற்போது பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், நாட்டின் நான்கு பகுதிகளில் இன்னும் வெப்ப எச்சரிக்கை நீடித்து வருகிறது.
காலநிலை மாற்றம்
குரோஷியாவின் ஹ்வார் தீவு மற்றும் அல்பேனியாவின் டேல் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வனப்பகுதிகள் மட்டுமின்றி திராட்சைத் தோட்டங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த தொடர் காட்டுத்தீ மற்றும் வெப்ப அலையின் பின்னணியில் காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் மீண்டும் வலியுறுத்துகின்றனர். புதைபடிவ எரிபொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து, உலக வெப்பமயமாதல் வேகமடைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
வெப்ப அலை
இதன் விளைவாக வெப்ப அலைகள் நீண்ட நாட்கள் நீடிப்பதுடன், காட்டுத்தீ போன்ற பேரிடர்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் ஐரோப்பாவில் பதிவான வரலாறு காணாத வெப்பநிலை, காலநிலை மாற்றம் இல்லாமல் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று உலக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். அந்த வெப்ப அலையைத் தொடர்ந்து பிரான்சில் ஒரு வாரத்தில் மட்டும் 2,000-க்கும் அதிகமான கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
வெப்ப எச்சரிக்கை
ஸ்பெயின் மற்றும் பெல்ஜியத்திலும் தலா ஆயிரத்திற்கும் அதிகமான கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அடுத்த சில நாட்களுக்கு மீண்டும் கடுமையான வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளன. இந்த வெப்ப அலை வார இறுதி வரை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.












Click it and Unblock the Notifications