கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ.. போர்ச்சுகல் தோல்விக்கு காரணமான ஈகோ யுத்தம்.. என்ன நடந்தது?
டல்லாஸ்: 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, போர்ச்சுக்கல் அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி போர்ச்சுகல் - ஸ்பெயின் இடையிலான ஆட்டத்தில் இரு அணிகளும் சரிக்கு சமமாக போராடின. 2ஆம் பாதி முடியும் வரை எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆனால், 2ஆம் பாதியில் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் மிக்கெல் மெரினோ அசாத்தியமாக ஒரு கோல் அடித்து போர்ச்சுகலின் உலகக்கோப்பை கனவை உடைத்தார்.

ஆட்டம் முடிந்ததும் 41 வயதான கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். மைதானத்தில் இருந்த போர்ச்சுகல் ரசிகர்களுக்குக் கைகளை அசைத்து தனது நன்றியைத் தெரிவித்தார். 6வது உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய ரொனால்டோவுக்கு, இதுவரை அவரது கால்பந்து வாழ்க்கையில் வெல்ல முடியாத ஒரே பெரிய மகுடமாக உலகக்கோப்பை மட்டுமே இருந்தது.
தற்போது அந்த கனவு முடிவுக்கு வந்துள்ளது. போட்டிக்கு பின் ரொனால்டோ பேசுகையில், உலகக்கோப்பையில் இருந்து இப்படி வெளியேறுவது வருத்தமளிக்கிறது. நான் எனது முழு உழைப்பையும் கொடுத்தேன். என் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் விளையாடி இருக்கிறேன். இது எனது கடைசி உலகக்கோப்பை என்பது உண்மைதான்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் எனது குடும்பத்தினருடன் ஆலோசித்து நிதானமாகவே முடிவெடுப்பேன். அவசரப்பட்டோ, உணர்ச்சிவயப்பட்டோ எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று தெரிவித்தார். சர்வதேச கால்பந்து வரலாற்றில் 232 போட்டிகளில் விளையாடி 146 கோல்களுடன் உலகின் அதிக கோல் அடித்த வீரராக ரொனால்டோ திகழ்கிறார்.
அதேபோல் 2006 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 6 உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ படைத்திருக்கிறார். யூரோ கோப்பை, சாம்பியன்ஸ் லீக், பாலன் டி ஆர் விருது என்று எத்தனையோ சர்வதேச சாதனைகளை படைத்துள்ள ரொனால்டோ, உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே ரொனால்டோ மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. தனிப்பட்ட ஈகோ காரணமாக ரொனால்டோ உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்று பிடிவாதமாக இருந்ததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. போர்ச்சுகல் அணியின் சிறந்த மிட் ஃபீல்டர்கள் இருந்த போதும், அதனை ரொனால்டோ உள்ளிட்டோர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications