பேரிடி! கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.. வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினோத் போகத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வினேஷ் போகத், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில், தனக்கு கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். தீர்ப்பு 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வினேஷ் போகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த போட்டியில் 16-ஆவது சுற்றில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகியை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத், காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா விஸ்லிவ்னா லிவாக்கை வீழ்த்தினார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார் வினேஷ் போகத்.

இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். ஒட்டுமொத்த தேசமும் வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தை ஏந்தும் தருணத்தை காத்திருந்த நேரத்தில், எடை கூடுதலாக இருந்ததாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அவரது கனவு தகர்ந்தது. இதைத் தொடர்ந்து பாரீசில் உள்ள சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தின் தற்காலிக அமர்வு முன் தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரிக்கையை வினேஷ் போகத் விடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 'முதல் நாள் போட்டியில் அவரது உடல் எடை விதிமுறைக்குட்பட்டே இருந்தது. தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும் போது, இயற்கையாக ஏற்படும் மாற்றத்தால் உடல் எடை கூடியதே தவிர அவர் இதில் மோசடி செய்யவில்லை. உடலுக்கு தேவையான குறைந்தபட்ச உணவை எடுத்துக் கொள்வது வீரர், வீராங்கனையின் அடிப்படை உரிமை. எனவே 100 கிராம் எடை அதிகரித்ததில் அவர் எந்த விதியையும் மீறவில்லை' உள்ளிட்ட வாதங்களை வினேஷ் போகத் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வினோத் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கான கடைசி நம்பிக்கையும் அறுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications