ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை ரூ.21 லட்சத்துக்கு வாங்கி மோசடி.. அதுவும் மொத்தம் 5.. பீகாரில்தான்
பாட்னா: பீகாரில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை ரூ.21 லட்சத்துக்கு வாங்கி மோசடி நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பாடாய்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது ஓரளவு குறைந்து ஆறுதல் அளிக்கிறது.
சில மாதங்களாக மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் நாடே அல்லாடி கொண்டிருந்தது.

3 மடங்கு விலை அதிகம்
இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் பீகாரில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 5 ஆம்புலன்சுகள் ரூ.21 லட்சம் மதிப்பில் 3 மடங்கு அதிகமாக விலை வைத்து வாங்கி மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பீகாரின் சிவான் மாவட்டத்தில் இந்த ஏழு ஆம்புலன்ஸ்களும் கடந்த ஆண்டு கொரோனா உச்ச நிலையில் இருந்தபோது மூன்று மடங்கு அதிகமான விலையில் வாங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவலமும் தெரியவந்துள்ளது.

விதிமுறைகள் மாயம்
மொத்தம் ஏழு இடங்களில், ஐந்து ஆம்புலன்ஸ்கள் முதலமைச்சரின் பிராந்திய வளர்ச்சி நிதியத்தின் கீழ் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 5 லட்சத்துக்கு மேல் செலவாகும் எந்தவொரு பொருளும் கட்டாயமாக அரசின் மின்-சந்தையிலிருந்து (ஜி.இ.எம்) வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் இங்கு பின்பற்றப்படவில்லை.

நிதீஷ் குமாருக்கு கடிதம்
இந்த மோசடி தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சிவான் மாவட்ட கலெக்டர் அமித் பாண்டே ' இந்த விவகாரம் தொடர்பாக பொது களத்தில் புதிய உண்மைகளைக் கொண்டு வந்து விசாரணை நடத்துவோம்' என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம்தொடர்பாகவும், இதுபோல் பல மோசடிகள் நடந்துள்ளதாகவும், உடனடியாக விசாரணை நடத்தும்படியும் முன்னாள் அமைச்சர் விக்ரம் குன்வர், முதல்வர் நிதீஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் பல மோசடிகள்
இ-காமர்ஸ் நிறுவனமான இந்தியா மார்ட்டில், ரூ.60,000 மதிப்பிலான வென்டிலேட்டர்கள் ரூ.3.41 லட்சத்திற்கும் அதிகமாக வாங்கப்பட்டன . ரூ.31,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ரூ.1.18 லட்சத்திற்கு மேல் வாங்கப்பட்டன. வெறும் ரூ.8,500 மட்டுமே செலவாகும் ஒரு உறிஞ்சும் இயந்திரம் ரூ.33,000 க்கு மேல் வாங்கப்பட்டது என்று தனது கடிதத்தில் பல்வேறு மோசடிகளை புட்டு வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் விக்ரம் குன்வர். இந்த மோசடி விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications