பீகாரில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இத்தகைய சாதனையை படைத்துள்ளதா? வரலாறு திரும்புமா?
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் இதுவரை நடந்த தேர்தல்களில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். பீகாருக்கு 1952 ஆம் ஆண்டு முதல் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்திய அரசு சட்டம் 1935-இன் படி, பீகாரும் ஒடிஸாவும் தனி மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்னர், 331 சட்டசபை தொகுதியின் எண்ணிக்கை இருந்தது. பின்னர் இரண்டாக பிரிந்ததும் பீகார் சட்டசபையின் பலம் 243 ஆக குறைந்தது.

தற்போது 243 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட பீகாருக்கு சட்டசபை தேர்தல், கடந்த 6ஆம் தேதியும் 11ஆம் தேதியும் என இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. 69 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல்வர் வேட்பாளர்களாக பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரும் (ஐக்கிய ஜனதா தளம்), மகா கூட்டணியின் தேஜஸ்வி யாதவும் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) களமிறங்குகிறார்கள்.
இவர்களில் யார் பீகாரில் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிதிஷ்குமாரை விட வயதிலும் அனுபவத்திலும் சிறியவரான தேஜஸ்வி வென்றால், அது பாஜகவுக்கு சம்மட்டி அடியாக இருக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் கடந்த காலங்களில் யார் வென்றார்கள் என்பதை பார்க்கலாம்.
1952 ஆம் ஆண்டு முதல் முதலில் நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா சின்ஹா முதல்வரானார். 1957ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீப் நாராயண் சிங் முதல்வரானார்.
1961 ஆம் ஆண்டு முதல்வராக காங்கிரஸின் பினோதானந்த ஜா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கிருஷ்ணா வல்லப சஹா முதல்வரானார். 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மகாமாயா பிரசாத் சின்ஹா முதல்வரானார். அந்த தேர்தலில் 1968 ஆம் ஆண்டு வரை 4 பேர் முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பிறகு 1968ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது. பின்னர் 1969ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின ஹரிஹர் சிங் முதல்வரானார். பின்னர் அவரது பதவி பறி போய் போலா பாஸ்வான் சாஸ்திரி முதல்வரானார். ஓராண்டுக்குள் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது.
பின்னர் தரோகா பிரசாத் ராய், கற்பூரி தாகூர், முதல்வர்களான நிலையில் அவர்களும் பதவியிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் போலா பாஸ்வானே முதல்வரானார். மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது. 1972 ஆம் ஆண்டு 6ஆவது முறையாக பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது.
1972 ஆம் ஆண்டு கெதர் பாண்டே, அப்துல் கஃபூர், ஜெகன்னாத் மிஸ்ரா ஆகியோர் முதல்வர்களாக அடுத்தடுத்து பதவியேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது. 1952 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை 24 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வந்த நிலையில் 1977 ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்தது.
அப்போது கற்பூரி தாகூர், ராம் சுந்தர் தாஸ் ஆகியோர் 2 ஆண்டுகள் முதல்வர்களாக இருந்தனர். பின்னர் 1980 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது. அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதில் ஜெகன்நாத் மிஸ்ரா, சந்திரசேகர் சிங் ஆகியோர் முதல்வர்களாகவும், பின்னர் 1985 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிந்தேஸ்வரி துபே, பகவத் ஜா ஆசாத், சத்யேந்திர நாராயண் சின்ஹா, ஜெகன்னாத் மிஸ்ரா ஆகியோர் 5 ஆண்டுகளை பிரித்து பிரித்து ஆட்சி செய்தனர்.
1990 ஆம் ஆண்டு 10 ஆவது முறையாக நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத் யாதவ் முதல்வரானார். அவர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ததும் 1995 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் லாலு பிரசாத் இரு ஆண்டுகள் முதல்வராக இருந்தார். பின்னர் அவர் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் எனும் கட்சியை தொடங்கினார்.
பின்னர் அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து 2000ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சமதா கட்சியை சேர்ந்த நிதிஷ்குமார் ஆட்சிக்கு வந்தார், அவர் 7 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். பின்னர் நிதிஷ் ஆட்சி கவிழ்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த ராப்ரி தேவி முதல்வரானார்.
2005 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தை தொடங்கிய நிதிஷ்குமார் முதல்வரானார். 2010 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அவரே வென்று 2014 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். 2014- 2015 ஆம் வரை ஜித்தன் ராம் மஞ்சி முதல்வராக இருந்தார். அடுத்தது 2015 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரே ஆட்சியை பிடித்தார். 2020 ஆம் ஆண்டு அவரே வென்று 10 ஆண்டுகளாக முதல்வராக இருந்தார். 2025 ஆம் ஆண்டு சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு தற்போது தேர்தல் முடிவுகள் வரவுள்ளன.
பீகாரில் காங்கிரஸ் கட்சி 30 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 11 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளது. எனவே இன்றைய தேர்தல் முடிவுகளில் அந்த வரலாறு திரும்புமா? காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கூட்டணி வெல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications