தேசிய அரசியலில் திடீர் திருப்பம்! நிதிஷ்குமாருடன் பிரசாந்த் கிஷோர் முக்கிய மீட்டிங்.. முழு பின்னணி
பாட்னா: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங். கட்சியுடன் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேற்றிரவு திடீரென பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோருக்கும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற மெசேஜ் சாட்டுகளும் கூட ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பிரசாந்த் கிஷோர் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் சந்திப்பு
டெல்லியில் உள்ள பீகார் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் நிதிஷ் குமாருக்கு பின்னர், நம்பர் 2 இடத்தில் இருந்த பிகே கடந்த 2020இல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பின்னர் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.

என்ன காரணம்
டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பைப் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் உறுதி செய்தார். அதேநேரம் இது சாதாரண சந்திப்பு தான் என்றும் இது குறித்து ஊடகங்கள் தங்கள் யூகங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல பிரசாந்த் கிஷோர் தரப்பிலும் இது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு என்றே கூறப்பட்டது. இது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், "நிதிஷ் குமாருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டபோது, அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க அவருக்கு போன் செய்தேன். அப்போது அவர் என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கூறினார். அதனால் தான் அவரை நேரில் சென்று சந்தித்தேன்.

பிகே விளக்கம்
இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு தான். இது கண்டிப்பாக அரசியல் மீட்டிங் இல்லை. அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் இருவேறு துருவங்களில் இப்போது உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங். பெரியளவில் வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒருவர் பிரசாந்த் கிஷோர். அதற்குப் பின்னர், பாஜக அவருக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சியில் பிகே ஈடுபட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த காலம்
இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக பணியாற்றி உள்ள போதிலும், பீகாரில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தான் அவர் கடந்த 2018இல் இணைந்தார். கட்சியில் இணைந்த உடனேயே அவருக்குத் தேசிய துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இருப்பினும், கடந்த 2020ஆம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்த நிலையில், பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், சமீபத்தில் அளித்த பேட்டியில் பீகார் முதல்வருடன் தனக்கு இருந்த நல்லுறவு குறித்துப் பேசி இருந்த பிகே, மீண்டும் அவருடன் இணையலாம் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவனத்தை ஈர்த்துள்ள சந்திப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரியளவில் வெல்ல பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனமும் முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் கூட இருவரும் இணைந்தே அரசியலில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் நடந்துள்ள இந்த சந்திப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பீகார் முதல்வருக்கும் முக்கியம்
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் கூட இந்த சந்திப்பு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு முக்கிய மெசேஞ் அனுப்பும் வகையிலேயே பிரசாந்த் கிஷோருடனான தனது சந்திப்பை நிதிஷ்குமார் பொதுவெளியில் அறிவிக்க முடிவு செய்ததாக டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடந்த 2020 பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களில் மட்டுமே வென்று 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அங்கு இப்போது 74 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக ஆதரவுடனேயே ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் பீகார் முதல்வரை பாஜக வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜகவுக்கு முக்கிய மெசேஜ் அனுப்பும் விதமாகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
