அங்க அடிச்சா..இங்க வலிக்கும்! பீகார் தோல்வி.. தமிழக காங்.,-ஐ வெளுக்கும் இணைய உ.பி.கள்! தவெக கூட்டணி?
சென்னை: பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில் காங்கிரஸ் மீதான விமர்சனங்கள் அதிகரித்து இருக்கிறது. அடம்பிடித்து 60 சீட்டுகளை கேட்டு பெற்ற நிலையில் ஒரு தொகுதியில் மட்டும் தான் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க கூடாது என நெட்டிசன்கள் திமுகவை வலியுறுத்தி வருகின்றனர். இதை அடுத்து தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாகி விடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பத்தில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணியே முன்னிலை வகித்தது.

243 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் 122 என்ற எல்லையை தொட்டாலே பீகாரில் மீண்டும் என்டிஏ - ஜேடியு ஆட்சி அமைப்பது உறுதி என்ற நிலையில் அதை தாண்டியே சென்றது அந்த கூட்டணி. வாக்கு எண்ணிக்கையின் போது 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்த ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி நேரம் செல்லச் செல்ல பெரும்பான்மையை இழந்து கொண்டே வந்தது.
பீகார் தேர்தல் முடிவுகள் 2025
இந்த நிலையில் கருத்துக்கணிப்புகளையும் தாண்டி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. குறிப்பாக காங்கிரஸின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. கர்நாடகாவை தவிர காங்கிரஸ் சந்தித்த பெரும்பாலான தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது விமர்சனத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. கடைசி மூன்று மக்களவை தேர்தல்கள், கர்நாடகாவை தவிர்த்து பிற மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வருகிறது.
பீகார் காங்கிரஸ் தோல்வி
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி உடனான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெருக்கம் காரணமாக இந்த முறை அதிக சீட்டுகளை கேட்டு பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சியினர் நினைத்தனர். ஆனால் பீகாரில் ஏற்பட்ட படுதோல்வியால் இணைய உடன்பிறப்புகள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பீகார் தேர்தலில் ஆர்ஜேடி வாக்கு வங்கியையும் காங்கிரஸ் கட்சி பாதித்துவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
காங்கிரஸ் அரசியல் எதிர்காலம்
இதன் காரணமாக 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். கடந்த தேர்தலின் போது அந்த கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 10 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. "அங்க அடிச்சா இங்க வலிக்கும்" என்பது போல பீகார் தேர்தலால் தற்போது காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு என தனித்த வாக்கு வங்கி இல்லாத நிலையில் திமுகவின் தயவிலேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகார் தோல்வியால் தமிழக காங்கிரஸ் திமுக இணைய உடன்பிறப்புகளால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் தமிழக வெற்றிக்காக கூட்டணி அமையலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
தவெக காங்கிரஸ் கூட்டணி
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்த தயாராக இருக்கும் நிலையில் 50 சீட்டுகள், துணை முதலமைச்சர் பதவி என பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் அந்த பேச்சுக்கு வலுக் கூட்டும் விதமாக திமுக காங்கிரஸ் மீது விமர்சனம் வைத்து வரும் நிலையில் அது நடக்கும் வாய்ப்புகளும் உள்ளது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications