பீகார் தேர்தல்.. தட்டி தூக்கும் நிதிஷ் பாஜக அண்ட் கோ.. தேஜஸ்வி காங்கிரசுக்கு ஷாக் தந்த சர்வே
பாட்னா: பீகார் மாநிலம், சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 2026 ஆம் வருடத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்பதால் மொத்த நாடும் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி 120-140 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. இதற்கு வருகிற நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது.

பீகார் தேர்தல்
ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. அதேபோல பிரபல தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பீகார் தேர்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜே.வி.சி (JVC) என்கிற அமைப்பு அங்கு தேர்தலுக்கு முந்தைய கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி 120-140 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி 93 - 112 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சர்வேயில் பாஜக
பாஜக தனிப்பெரும்பான்மை கட்சியாக 70-81 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும், அதற்கு அடுத்தபடியாக ஜேடியூ 42-48 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் கட்சி 5- 7 தொகுதிகள், இந்துஸ்தான் அவம் மோர்ச்சா 2 தொகுதிகள், இதரக் கட்சிகள் 1-2 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
எம்ஜிபி எனப்படும் மஹாகத்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி கட்சி 69-78 தொகுதிகளையும், காங்கிரஸ் 9-17 தொகுதிகளையும் சிபிஎம், சிபிஐ கட்சிகள் தலா 1-2 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 41-43 சதவீதம் வாக்கையும் மஹாகத்பந்தன் கூட்டணி 39-41 சதவீதம் வாக்கையும் பெற வாய்ப்புள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 6-7 சதவீதம் வாக்கை பெற வாய்ப்புள்ளது.
வாக்கு சதவீதம்
இதர பிராந்திய கட்சிகள் 11 சதவீதம் வாக்கை பெற வாய்ப்புள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவாக 33 சதவீத மக்களும், நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 29 சதவீத மக்களும், சிரக் பஸ்வான், பிரசாந்த் கிஷோருக்கு ஆதரவாக 10 சதவீத மக்களும், துணை முதல்வர் சாம்ரத் சௌத்ரிக்கு ஆதரவாக 9 சதவீத மக்களும், இதர 4 சதவீத மக்கள் பாஜகவில் மற்ற தலைவர்கள் யாராவது அந்த பதவிக்கு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications