இனி வாகனங்களில் ஜாதி பெயர் இருந்தால் ரூ.2,000 அபராதம்.. அதிரடியாக உத்தரவிட்ட போக்குவரத்து துறை
பாட்னா: பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஜாதியின் பெயர்களின் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கரை ஒரு மாதத்துக்குள் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பிறப்பால் அனைவரும் சமம். ஆனாலும் கூட ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினர் ஒடுக்கப்படுகின்றனர். அதோடு சிலர் தனது ஜாதியின் பெயரை பெருமையாகவும், வீரமாகவும் கருதி பச்சை குத்துவது, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் போக்குவரத்து துறை சார்பில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு பீகாரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பீகார் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள கடுமையான உத்தரவின்படி, ''அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களில் இருந்து ஜாதி பெயர், ஜாதியை குறிக்கும் வாசகங்கள், ஸ்டிக்கர்களை ஒரு மாதத்தில் நீக்க வேண்டும். அதன்படி வாகனங்களில் உள்ள ஜாதி சார்ந்த வாசகங்களை தானாக முன்வந்து அகற்றுவதற்கு, ஜூன் முதல் வாரம் கடைசி கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடு முடிந்ததும், மாநிலம் முழுவதும் போக்குவரத்து காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனைகளைத் தொடங்குவார்கள். இதன் வாயிலாக, விதிமீறுவோர் உடனடியாகக் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கால அவகாசம் முடிந்த பின்னரும் விதிமுறைகளை புறக்கணிப்போர் மீது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். இதனை மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
பீகாரை எடுத்து கொண்டால் பிராமணர், சத்திரியர், யாதவர் உள்ளிட்ட ஜாதி பெயர்களை ஏராளமானவர்கள் தங்களின் வாகனங்களின் ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார்களில் ஜாதி பெயர்கள் இருப்பதை கண்காணித்து வாகனத்தின் பதிவெண் அடிப்படையில் அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பீகார் போக்குவரத்து துறையின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications