பீகாரில் 6.5 லட்சம் பேருக்கு கட்டாயக் கருத்தடை செய்த காங்கிரஸ் முதல்வர்.. நாற்காலியை பிடுங்கிய மக்கள்
பாட்னா: ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளி... அந்த நிலத்தடி இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து, பீகாரின் முதல்வர் ஆசனத்தில் அமர்ந்தார். இவர் தான் பிந்தேஸ்வரி பிரசாத் துபே. 1985 முதல் 1988 வரை பீகாரை வழிநடத்திய இவர், "சாதாரண மனிதன் உயர்ந்தால் எத்தனை உச்சத்தை அடைய முடியும்?" என்பதற்கே சாட்சியாக இருந்தார்.
ஆனால், இவரது பெயரை வரலாற்றில் பெரிதும் பேச வைத்தது 1975 அவசர நிலை காலத்தில் நடந்த கட்டாயக் கருத்தடை நடவடிக்கைகள்தான்!

சுரங்க தொழிலாளியிலிருந்து சட்டமன்றம் வரை
- 1921 ஜனவரி 14 - போஜ்பூர் மாவட்டத்தில் பிறந்தார்.
- பாட்னாவில் படிக்கும் போது டியூஷன் எடுத்தும், தொழிற்சாலையில் வேலை செய்தும் கல்வியை தொடர்ந்தார்.
- 1942 குவிட் இந்தியா மூவ்மென்ட்-இல் பங்கேற்று 2 ஆண்டுகள் சிறை.
- பிறகு நிலக்கரி சுரங்கத்தில் வேலை - அங்கிருந்து தொழிலாளர் தலைவராக எழுச்சி.
- 1952-ல் முதல் முறையாக சட்டமன்றத்தில் கால் பதித்தார்.

6.5 லட்சம் கருத்தடை!
1975-ல் அவசரநிலை அமலானபோது துபே, சுகாதார அமைச்சராக இருந்தார். சஞ்சய் காந்தி முன்னெடுத்த "நாம் இருவர், நமக்கு இருவர்" பிரச்சாரம் தீவிரம் அடைந்தது.
- பீகாருக்குக் கொடுக்கப்பட்ட இலக்கு: 3 லட்சம் கருத்தடைகள்.
- நடந்தது? 6.5 லட்சம் பேர் கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டனர்!
- தினக்கூலிகள், பிச்சைக்காரர்கள், சிறைக் கைதிகள் என்று யாரும் விடுபடவில்லை. விரட்டி விரட்டி கருத்தடை செய்து மேலிடத்தின் செல்லப் பிள்ளையாக மாற முயன்றார் துபே. இதற்காக சஞ்சய் காந்தி கூட வெகுவாக பாராட்டினார். ஆனால், மருத்துவ சமூகத்தின் கோபம் காரணமாகவும், மக்களின் கோபத்தாலும், 1977 தேர்தலில் கடுமையாக தோல்வியடைந்தார்.
முதல்வரின் ஆசனம் (1985)
இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு, ராஜீவ் காந்தியின் அனுதாப அலை பீகாரிலும் காங்கிரசுக்கு அபார வெற்றியைத் தந்தது. கோஷ்டிப் பூசலை தவிர்க்க, ராஜீவ் காந்தி பிந்தேஸ்வரி துபேவையே முதல்வராகத் தேர்ந்தெடுத்தார். 1985 மார்ச் 12 - பீகாரின் 17வது முதலமைச்சராக பதவியேற்றார்.
வெள்ளத்தில் அடித்துச் சென்ற அதிகாரம் (1987-88)
1987-ல் பீகார் முழுவதையும் சூறையாடிய வெள்ளத்தால் 39 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் பேரழிவை சந்தித்த கொடூரம் அரங்கேறியது.
- வெள்ளத்தால் 3 கோடி மக்கள் பாதிப்படைந்தனர்
- 2 லட்சம் வீடுகள் அழிவு
- 20 லட்சம் குடும்பங்கள் இடம்பெயர்வடைந்தன.
அரசின் நிவாரணப் பணிகளில் முறைகேடுகள் என குற்றச்சாட்டு எழுந்தது. வாஜ்பாய் நேரடியாக தாக்கி, "இந்த வெள்ளத்தில் பாதுகாப்பாக இருப்பது துபே ஜி மட்டும் தான்" என கேலி செய்தார். இதனால், ராஜீவ் காந்தி கோபம் அடைந்ததால், 1988 பிப்ரவரியில் துபே ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
இறுதி நாட்கள்
பின்னர் மத்திய அமைச்சரவையில் சட்டம், தொழிலாளர் நலத் துறைகளில் பணியாற்றினார். 1993 ஜனவரி 20ல், அப்போது, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே உடல்நலக்குறைவால் மறைந்தார். ஒரு சுரங்கத் தொழிலாளியின் வாழ்க்கைப் பயணம்... அதிகார உச்சம் எட்டியதும், அதே வேகத்தில் வீழ்ச்சியடைந்ததும் - பிந்தேஸ்வரி துபேவின் அரசியல் அத்தியாயம் இன்னும் பீகாரின் நினைவுகளில் பதிந்தே இருக்கிறது.












Click it and Unblock the Notifications