Exploring Bihar: பீகார்: நேற்று, இன்று, நாளை.. திசை மாறிய பௌத்தம்! கடவுளே இல்லை என்றவர் கடவுளாக்கப்பட்ட கதை
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் பீகாரில் பௌத்த மதத்தின் தொடக்கம், வளர்ச்சி பற்றி பேசியிருந்தோம். இன்று, கடவுளே இல்லை என்று சொன்ன புத்தர் எப்படி கடவுளாக்கப்பட்டார் என்பது பற்றி பார்ப்போம்.
சாதிய அமைப்புகள், சமய சடங்குகள், ஏற்றத்தாழ்வு போன்றவற்றுக்கு எதிராக சமண மதத்தை தொடர்ந்து பௌத்தம் தோன்றியது. புத்தர் காலத்தில், அவர் வாழ்ந்த மகத நாட்டின் (தற்போதைய பீகார்) அரசர்களான பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு ஆகியோர் பௌத்த மதத்தை பரப்ப ஆதரவு அளித்தனர்.

அரச மதம்
அதை தொடர்ந்து மௌரிய பேரரசு காலத்தில் பௌத்தம் வேகமாக வளர்ந்தது. குறிப்பாக கலிங்கப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மனமாற்றத்தினால், அசோகர் பௌத்த மதத்தைத் தழுவினார். தன் ஆட்சிப்பகுதி முழுவதும் அவர் பௌத்தத்தை பரப்பினார். தன்னுடைய மகன் மகிந்த மற்றும் மகள் சங்கமித்தை ஆகியோரை இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு பௌதத்தை பரப்பினார்.
வேகமாக வளர்ந்த பௌத்தம்
இதை தொடர்ந்து குஷானப் பேரரசு காலத்திலும், ஹர்ஷவர்தனர் காலத்திலும், பல்லவப் பேரரசு பேரரசு (தமிழகம்) காலத்திலும் பெளத்தம் வேகமாக வளர்ந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சாமானிய மக்களுக்கான மதமாக இருந்த பௌத்தம் பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு ஆகியோர் காலததில் அரச மதமாக வளர்ந்தது. எப்போது ஒரு மதம் அரசுடமையாக்கப்படுகிறதோ, அப்போதே அது தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிடுகிறது. பௌத்தம் விஷயத்திலும் இதுதான் நடந்தது.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறினார். ஆசைக்கு காரணம் தனி சொத்துதான். ஆனால் புத்தர் மறைவுக்கு பின்னர், தனி சொத்தை முக்கியமாக கொண்டவர்கள், அதாவது அரசர்கள் பௌத்தத்தை தங்கள் இஷ்டத்திற்கு வளைத்தனர். இங்குதான் பௌத்தம், 'தேவாரவாதம் vs மகாயானம்' என இரண்டாக உடைந்தது.
தேவாரவாதம் என்றால் என்ன?
சிறிய வழி, பெரியவர்களின் போதனை என்பதுதான் இதன் பொருள். புத்தரின் மூல போதனைகளை இவர்கள் கடைப்பிடிப்பார்கள். இவர்களுக்கு புத்தர் என்பவர் கடவுள் கிடையாது. அவர் ஒரு வழிகாட்டி, ஒரு வரலாற்று மனிதர், அவ்வளவுதான். பாலி மொழியில் உள்ள திரிபிடகம் (விநய பிடகம், சுத்த பிடகம், அபிதர்ம பிடகம்) மட்டுமே இவர்கள் பின்பற்றுகிறார்கள். எனவே இயல்பாகவே இவர்கள் தனிச்சொத்து, மடங்கள், கோயில்கள், கொடைகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இருக்கின்றனர்.
மகாயானம் என்றால் என்ன?
இவர்களால் புத்தர் ஒரு தெய்வீகமான, உயர்ந்த நிலையை அடைந்தவர். அவர் எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் இருப்பவர் என்று நம்பப்படுகிறது. பௌத்தத்தின் புதிய வடிவம்தான் இந்த மகாயானம். இவர்கள் மகாயான சூத்திரங்களை பின்பற்றுகின்றனர். இதை புத்தர் எழுதவில்லை. ஆனால் இவற்றை புத்தரே எழுதியதாகவும், அப்போது இவற்றை போதிப்பதற்கு உரிய பக்குவம் இல்லாத காலகட்டம் என்பதால், இதனை நாகர்களிடம் அளித்துவிட்டு சென்றதாகவும் இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நாகர்கள் இதை கண்டறிந்து உலகுக்கு கொடுத்ததகாவும் சொல்லப்படுகிறது.
திசை மாறிய பௌத்தம்
இதில் முரண்பாடான விஷயம் என்னவெனில், கடவுள் இல்லை என்று கூறிய, ஆத்மாவ மறுத்த ஒரு தத்துவம், கடைசியில் அதனை தோற்றுவித்தவரின் நினைவே இறுதி மோட்சத்திற்கு வழிவகுக்கும் என கூறியது என்பதுதான். புத்தர் என்பவர் கடவுள், எனவே அவருக்கு தேவையான மடங்கள். துறவிகள், விழாக்கள், பூசாரிகள் ஆகியவற்றை மகாயானம் வலியுறுத்தியது. புத்தர் மற்றும் துறவிகளின் தெய்வீக கருணை இருந்தால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும் என்று இவர்கள் வலியுறுத்தினர்.
புத்தர் தனி சொத்தை கைவிட்டு கூட்டமாக பழங்குடி மக்களை போல வாழ சொன்னார். இதற்கு உதாரணமாக மடங்களை கூறினார். ஆனால், மகாயானம் மடங்கள் மூலம் உலகத்தை துறக்க சொல்லி வலியுறுத்தியது. மட்டுமல்லாது புத்தர் போதித்த நாத்திக தத்துவத்தையும் உடைத்தது. இப்படியாக பௌத்தம் திசை மாறியது.












Click it and Unblock the Notifications