அரசியல்வாதியான தமிழ்நாடு முன்னாள் டிஜிபி.. ஒரு காலத்தில் “மாஸ்” காட்டினாரே! எந்த கட்சி தெரியுமா?
பாட்னா: தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரி கருணா சாகர் பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து இருக்கிறார்.
காவல்துறை மற்றும் அரசு துறைகளில் பணிபுரிந்த பல அதிகாரிகள் தங்கள் ஓய்வுக்கு பிறகு அரசியல்வாதியாக மாறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்த பல அதிகாரிகள் ஓய்வுக்கு பிறகு அரசியல் கட்சிகளில் இணைந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் இணைந்து தற்போது மாநில தலைவர் ஆகி இருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சசிகாந்த் செந்திலும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தவர்தான்.
இந்த நிலையில் தான் தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அரசியல்வாதியாகி உள்ளார். அவர்தான் கருணா சாகர். பீகாரை சேர்ந்த இவர், அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறார்.

பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த கருணா சாகர், அங்குள்ள லயோலா பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்தார். அதன் பின்னர் டெல்லிக்கு சென்ற அவர், வரலாற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்று, கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பீகாரில் மக்களை பாதுகாக்க ஐபிஎஸ் அதிகாரியாக விரும்பினார் கருணா சாகர்.
இதற்காக விரிவுரையாளர் பணியை துறந்து UPSC தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரி ஆனார். 1991 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான கருணா சாகர், 1994 ஆம் ஆண்டு கும்பகோணம் ஏஎஸ்பியாக இருந்தது தொடங்கி 32 ஆண்டுகள் தமிழ்நாடு காவல்துறையில் உயரிய பதவியான டிஜிபி உட்பட பல்வேறு பதவிகளிலும், பிரிவுகளிலும் பணியாற்றி இருக்கிறார்.
அதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கீழ் வரும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இந்த பொறுப்பில் அவர் இருந்தபோது காவல்துறையை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரமான SMART இன் கீழ் காவல்துறையை நவீனப்படுத்துவோம் என்று தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு பாரத் கவுரவ் என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இவர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை மற்றும் பிரிவு உபசார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில்தான் அவர், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து இருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள தேஜஸ்வி யாதவ், "இன்று தமிழ்நாடு முன்னாள் டிஜிபி எங்கள் கட்சியில் இணைந்து இருக்கிறார். இதுபோன்ற அறிவு ஜீவிகளை நமது கட்சியில் இணைக்க முயல்கிறோம்." என்றார்.













Click it and Unblock the Notifications