நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு.. அடுத்து பாஜக கூட்டணி ஜோதியில் ஐக்கியமாகும் மாஞ்சி கட்சி!
பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக ஜிதன் ராம் மஞ்சி அறிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் ஜிதன் ராம் மஞ்சி கூறி பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்
பீகாரில் ஐக்கிய ஜனத தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியின் தலைவர் ஜித்தன் ராம் மஞ்சியும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து இருந்தார். இந்தநிலையில், திடீர் திருப்பமாக நிதிஷ்குமாருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜித்தன் ராம் மஞ்சி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ஜித்தம் ராம் மஞ்சி, "ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்து இருக்கிறேன். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன்" என்று தெரிவித்தார். வரும் லோக்சாபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஆர்வம் காட்டி வரும் நிதிஷ் குமாருக்கு ஜித்தன் ராம் மஞ்சியின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஜித்தம் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையிலும் அங்கம் வகித்து இருந்தது. ஜித்தன் ராம் மஞ்சியின் மகன் சுமன், அமைச்சர் பதவி வகித்தார். இந்த நிலையில் தான் கடந்த வாரம் அமைச்சர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார். தனது கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்க நிதிஷ்குமார் அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியிருந்தார்.
பீகார் அரசியலில் ஜித்தம் ராம் மஞ்சியின் இந்த திடீர் மூவ் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு 160 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. எனவே, ஜித்தம் ராம் மஞ்சி கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லையென்றாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கட்சியை இணைக்க வலியுறுத்தியதாக ஜிதன் ராம் மஞ்சி முன் வைத்த குற்றச்சாட்டுகு பதிலளித்த நிதிஷ் குமார், பாஜகவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சிகளை ஜிதன்ராம் மாஞ்சி உளவு பார்க்கிறார்.
வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை ஜிதன் ராம் மஞ்சி கசிய விடுவார் என்பதாலேயே ஹிந்துஸ்தான் அவாம் கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்க சொன்னேன்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தான் கூட்டணியை விட்டு வெளியேறி இருக்கும் ஜிதன் ராம் மஞ்சி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்க போவதாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications