அடுத்த மாதம் தேர்தல்! இன்னும் தொகுதி பங்கீட்டையே முடிக்கல! பீகாரில் காங்., பாஜக கூட்டணியில் குழப்பம்
பாட்னா: நவ.6 மற்றும் 11ம் தேதிகளில் பீகாரில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இதனால் இரண்டு கூட்டணி தலைமையும் கடும் அப்செட்டில் இருக்கிறது.
பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ.22ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சராக கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் உள்ளார். இக்கட்சி தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மும்முனை போட்டி இருக்கிறது

1. ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான என்டிஏ கூட்டணி
2. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி
3. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி
பாஜக கூட்டணியின் நிலைமை
இதில் என்டிஏ கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ்குமாரின் கட்சி), லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்), மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா என மொத்தம் 5 கட்சிகள் இருக்கின்றன. இந்த 5 கட்சிகளில் 3 கட்சிகள் கடந்த முறையும் என்டிஏ கூட்டணியில் இருந்தன. இதில் பாஜக 110 தொகுதிகளில் போட்டியிட்டு 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 இடங்களிலும், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 7 தொகுதிகளில் போட்டியிட்ட 4 இடங்களையும் வென்றிருந்தது.
அடம்பிடிக்கும் கூட்டணி கட்சிகள்
எனவே இந்த 3 கட்சிகளும் கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி இந்த முறை 15 தொகுதிகளை கேட்டிருக்கிறது. ஆனால் இக்கட்சிக்கு பாஜக ஒரு செக் வைத்திருக்கிறது. அதாவது இக்கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சியை மத்திய அமைச்சராக வைத்திருக்கிறது. இதன் மூலம் சீட் பேரம் பேசக்கூடாது என்று கூறியிருந்தது. ஆனால் ஜிதன், "எனக்கு அமைச்சர் பதவியெல்லாம் எதுவும் வேணாம். எங்க கட்சிக்கு அங்கீகாரம் வேணும். அதனால் குறைந்தது 15 தொகுதிகள் வேண்டும்" என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
வெற்றி வாய்ப்புகள் எத்தனை
ஆனால் போன முறை ஒதுக்கிய 7 தொகுதிகளே உங்களுக்கு அதிகம்தான். இன்னும் கூடுதலாக எனில் அதிகபட்சமாக 10 வரை ஒதுக்க முடியும் என்று பாஜக கட்-அண்ட் ரைட்டாக பேசி வருகிறது. இதனால் அப்செட் ஆன ஜிதன், "நாங்க கேட்ட தொகுதியை கொடுத்தால் ஓகே. இல்லையெனில் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. வெளியிலிருந்து என்டிஏவுக்கு ஆதரவளிக்கிறோம்" என்று உடைத்து பேசியிருக்கிறார். இதனால் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
மறுபுறம் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாபந்தன் கூட்டணியிலும் குழப்பம் உச்சத்தை எட்டியிருக்கிறது. பீகாரில் இடதுசாரிகளுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.
1. ராஷ்டிரிய ஜனதா தளம்
2. காங்கிரஸ்
3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்)
4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
6. விக்காசீல் இன்சான் கட்சி
7. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
காங்கிரஸ் கூட்டணி
அகிய கட்சிகள் மகாபந்தன் கூட்டணியில் இருக்கின்றன. இக்கட்சிகளில் கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144ல் போட்டியிட்டு 75 இடங்களையும், காங்கிரஸ் 70ல் போட்டியிட்டு 19 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) 19ல் போட்டியிட்ட 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. ஒப்பீட்டளவில் குறைவான இடங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) வெற்றி பெற்றாலும், போட்டியிட்ட தொகுதிகளில் அதிக தொகுதிகளை வென்றது இக்கட்சிதான். அதாவது
ராஷ்டிரிய ஜனதா தளம் - 52.08%
காங்கிரஸ் - 27.14%
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) - 63.16%
கூடுதல் இடம் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்)
என வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே இந்த முறை அதிக இடங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) கேட்டிருக்கிறது. மொத்தம் 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கட்சி கேட்டிருந்தது. ஆனால் கூட்டணி தலைமை, வாய்ப்பே இல்லை ராஜா என்று கைவிரிக்க 30 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட மாட்டோம் என்று கூறியிருக்கிறது. இக்கோரிக்கையை இன்னும் கூட்டணி தலைமை ஏற்கவில்லை. எனவே மகாபந்தன் கூட்டணியிலும் குழப்பம் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. விரைவில் இதற்கு தீர்வு காணப்பட்டால்தான் அடுத்தடுத்த பிரச்சார பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications