ஆகஸ்ட் மாதத்திற்குள் மோடி அரசு கவிழ்ந்து விடும்.. தேர்தலுக்கு ரெடி ஆகுங்க.. லாலு பிரசாத் கணிப்பு!
பாட்னா: பலவீனமாக உள்ள பாஜக அரசு வரும் ஆகஸ்ட் மாதம் கவிழ்ந்து விடும் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆரூடம் கூறியுள்ளார்.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவன நாள் விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்ஜேடி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஆர்ஜேடி கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பேசினார்.

அப்போது பேசிய லாலு பிரசாத், நமது கட்சியின் ஆணி வேரான தொண்டர்களுக்கு ஒரு செய்தியை இங்கு கூற விரும்புகிறேன். மீண்டும் மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அதற்கு தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரு மாநில கட்சிகளுடன் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி அரசு பலவீனமான அரசாக அது உள்ளது. இந்த கூட்டணி அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் கவிழ்ந்துவிடும்.
எனவே, தொண்டர்கள் தேர்தல் பணியாற்றத் தயாராக இருங்கள். இங்குள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சி தங்கள் கொள்கைகளில் இருந்து சமரசம் செய்துகொண்டு ஆட்சி, அதிகாரத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் எப்போதும் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது.
இப்போதும், இதற்கு முன்பும் பாஜகவிடம் நாங்கள் மண்டியிட்டது கிடையாது. கடந்த மக்களவைத் தேர்தலில் நமது கட்சியின் வாக்கு சதவீதம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் குறைந்துள்ளது.
மக்களவை தேர்தலில் நமது கட்சியின் செயல்பாடு குறித்து மறு ஆய்வு செய்தோம். நமது கட்சி திருப்திகரமாகவே செயல்பட்டுள்ளது. இன்று நாம் 4 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றோம். எதிர்வரும் தேர்தல்களில் இதை விட அதிகம் பெறுவோம். கடந்த தேர்தலில் நமது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 9 இடங்களில் வென்றோம்" எனத் தெரிவித்தார்.
லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், "பாஜக தலைமையிலான இரட்டை என்ஜின் ஆட்சியில் ஒரு என்ஜின் ஊழலை இயக்குகிறது. மற்றொன்று குற்றங்களை ஊக்குவிக்கிறது. ஆனால் நீட் வினாத்தாள் கசிவு, தொடர் பால விபத்துகள், பீகாரில் நடக்கும் கொலை குற்றங்களுக்கு நிதிஷ் குமார் அரசு என் மீது வீண் பழி சுமத்துகிறது. அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் என்னை கைது செய்யட்டும்" எனத் தெரிவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. எனினும், பாஜக தனியாக 240 இடங்களில் மட்டுமே வென்றதால் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைந்தது.












Click it and Unblock the Notifications