பாகிஸ்தான் ஏஜெண்டுகள் பலருக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு - பீகார் ஆர்ஜேடி தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
பாட்னா: பீகாரில் கைதான பாகிஸ்தான் ஏஜெண்டுகள் பலருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஜகதானந்த் சிங் தெரிவித்து உள்ளார்.
பீகார் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவருக்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை மேற்கொண்டது.

பீகார் ஆர்ஜேடி தலைவர் பேச்சு
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஜகதானந்த் சிங், "ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்து இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்காகவே பி.எப்.ஐ. அமைப்பு நிறுவப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மீதான அச்சம் காரணமாக தனியாக ஒரு அமைப்பை நிறுவி தனது சமுதாய மக்களுக்கு உதவினால் அவர்களை ஏன் கலவரக்காரர்கள் எனவும் தேச விரோதிகள் என்றும் அழைக்கிறீர்கள்?

ஆர்.எஸ்.எஸ்-உடன் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் தொடர்பு
நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி பாதுகாப்பு நிறுவனங்களால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஏஜெண்டுகளில் பெரும்பாலானவர்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருந்தது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர்களிடம் இஸ்லாமியர்கள் பேசுவது தேசவிரோத செயலாக கருதப்படுவது ஏன்? பாகிஸ்தானை சேர்ந்தவர்களிடம் போனில் பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று குற்றம்சாட்டப்படுகிறார்கள்.

பாஜக கண்டனம்
பாகிஸ்தானில் உள்ளவர்கள் இந்தியாவில் வசிக்கும் தங்கள் உறவினர்களோடு பேசுவதால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளதா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ஜகதானந்த் சிங்கின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தேச விரோதிகளுக்கு ஆதரவாக பேசும் இவரை போன்றவர்கள் மீது தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாஜக சட்டமேலவை உறுப்பினர் சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி, பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வகுப்புவாத அரசியலை செய்து வருவதாக குற்றம்சாட்டினார். "பாஜக ஆளும் மாநிலங்களில் பி.எப்.ஐ-யை வைத்து இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே ஆர்.எஸ்.எஸ். மோதலை ஏற்படுத்துகிறது. இதில் பாஜக பயனடைகிறது. 80 சதவீத இந்துக்கள் மனதில் 16 சதவீத இஸ்லாமியர்கள் குறித்த அச்சத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்குகிறது. ஆர்.ஜே.டியும் அதையே செய்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications