‛முஜ்ரா’ நடனம்.. எதிர்க்கட்சிகளை கோபமாக்கிய மோடி பேச்சு! பிரதமருக்கு சிகிச்சை தேவை என போர்க்கொடி
பாட்னா: இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் ‛முஜ்ரா' நடனமாடலாம் என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்த கோபத்துக்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ‛முஜ்ரா' என்ற வார்த்தை தான் காரணம் என்ற நிலையில் அதன் பின்னணியை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டன. இன்றுடன் 6 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்துவிட்டன. இனி ஜுன் 1ம் தேதி கடைசி மற்றும் 7 வது கட்ட லோக்சபா தேர்தல் என்பது நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று பீகாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் உள்ளிட்ட ‛இந்தியா' கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த வேளையில் பிரதமர் மோடி கூறிய ஒரு வார்த்தை தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக ‛இந்தியா' கூட்டணி கட்சியின் முஜ்ரா நடனம் ஆடுவதாக தெரிவித்துள்ளார். இது தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதுபற்றி பீகார் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பீகார் என்பது சமூக நீதிக்கான போராட்டத்துக்கு புதிய பாதையை ஏற்படுத்திய மண்ணாகும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளின் உரிமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் ‛இந்தியா' கூட்டணியின் திட்டத்தை இந்த மண்ணும், நானும் சேர்ந்து முறியடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். அவர்கள் (இந்தியா கூட்டணி கட்சியினர்) அடிமைகளாக இருந்துகொண்டு தங்கள் வாக்கு வங்கியை(மறைமுகமாக இஸ்லாமியர்களை குறிப்பிட்டு) மகிழ்விப்பதற்காக 'முஜ்ரா' நடனம் கூட ஆடலாம்'' என்றார்.
முஜ்ரா என்பது முகலாயர் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நடனமாகும். முகலாயர் ஆட்சிக்காலத்தில் உருவான நடன முறைதான் முஜ்ரா. இந்த நடனத்தை பங்கேற்போர் பெரும்பாலானவர்கள் தேவதாசிகள் என கூறப்படுகிறது. நாளைடைவில் இந்த நடனம் என்பது குறைந்து வந்துள்ளது. தற்போது சில வடஇந்திய நகரங்களில் முஜ்ரா நடனம் ‛தவைஃப்' என்ற பெயரில் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கிக்காக ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் ‛முஜ்ரா' நடனம் ஆடலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த கருத்து தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ‛‛பீகாரில் பிரதமர் மோடி பேசியபோது அவதூறான மொழிகளை பயன்படுத்தி உள்ளார். இத்தகைய வார்த்தைகளை நாட்டின் எந்த பிரதமரும் இதுவரை பயன்படுத்தது இல்லை. நாங்கள் பிரதமர் பதவிக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கான மரியாதையுடன் நடந்து கொள்கிறாரா? அவர் எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்'' என விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், ‛‛இன்று பிரதமர் மோடியின் வாயில் இருந்து ‛முஜ்ரா' என்ற வார்த்தையை கேட்டுள்ளேன். பிரதமர் மோடியின் மனநிலை எப்படி உள்ளது? அவர் ஏன் இப்படி பேசுகிறார்? அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் பிரதமருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் சூரியஒளிக்கு மத்தியில் அவர் பேசுவதால் அவரது மூளையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிவசேனா (யுபிடி) அணியின் தலைவர் பிரியங்கா சதுர்வேதி , பிரதமர் மோடியின் முஜ்ரா நடனம் தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‛‛விரைவில் குணமடையுங்கள் மோடி ஜி'' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆர்ஜேடி கட்சியின் ராஜ்யசபா எம்பி மனோஜ் ஷா கூறுகையில், ‛‛ பிரதமர் மோடியை நினைத்து நான் இப்போது கவலைப்படுகிறேன். நேற்று வரை நாங்கள் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தோம். ஆனால் இப்போது அவரை பற்றி கவலைப்படுகிறோம். அவர் பிரமாண்டமான மாயையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நான் சமீபத்தில் கூறினேன். அரிவாள், ஆட்டிறைச்சி, மாங்கல்யம், முஜ்ரா இதுவெல்லாம் பிரதமர் பயன்படுத்தி வார்த்தை.. இதுவெல்லாம் பிரதமராக இருப்பவர் பயன்படுத்தும் மொழியா? என தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சாகேட் கோகலே கூறுகையில், ‛‛ நாரி சக்தி என்பதை பயன்படுத்திய மனிதர் தற்போது தரம்தாழ்ந்து முஜ்ரா என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். 10 ஆண்டு ஆட்சியில் விளம்பர போர்வையில் அவர் தனது சுயரூபத்தை காட்டாமல் மிகவும் கவனமாக செயல்பட்டார். ஆனால் இனியும் மோடியால் தன் சுயரூபத்தை மறைக்க முடியாது. ஏனென்றால் இது அத்தகைய மலிவான வார்த்தை. மேலும் பிரதமராக தனது வெளிநாட்டு பயணங்களில் அவர் என்ன சொல்கிறார் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது'' என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications