தூள் தூளாகுது.. பிஜேபிக்கு இதெல்லாம் தேவையா? இலவச ரேஷனில் என்ன கருணை? நறுக்குனு கேட்டது யார் பாருங்க
பாட்னா: பாஜக தலைவர்கள் மிக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதுமுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன..

இதைத்தவிர, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் 2020ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன..
ரேஷன்: காரணம், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்காகவே, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.. அப்போதிருந்தே, இந்த திட்டத்தின் மூலம் தேசம் முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன...
மானிய விலை உணவு தானியத்துக்குமேல், கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டும் வருகிறது. இந்தியாவில் பல குடும்பங்கள் ரேஷன் கடை சலுகைகளையே நம்பி உள்ளதால், இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. இந்த இலவச ரேசன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது.
தேர்தல் அறிக்கை: இப்படிப்பட்ட சூழலில்தான், மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.. இந்த தேர்தலையொட்டி மத்திய பாஜக தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.. இந்த ஒவ்வொரு பிரச்சாரங்களிலும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பாஜக அரசின் இலவச ரேஷன் பொருட்கள் பற்றி பேசி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இலவச ரேஷன் பொருள் 2029 வரை தொடரும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குதான் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மாயாவதி: இதுகுறித்து மாயாவதி தன்னுடைய ட்வீட்டில், "பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் நாட்டில் தலைவிரித்தாடுகின்றன. இந்த பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக இலவச ரேஷன் பற்றி பாஜவினர் பேசி வருகிறார்கள..
ஏழைகளுக்கு சிறிதளவு இலவச ரேஷன் வழங்குவதிலேயே பாஜகவினர் குறியாக இருக்கிறார்கள்.. இதற்கு பெயர் கருணை கிடையாது. இலவச ரேஷன் என்பது பாஜக அரசின் கருணையோ, சலுகையோ அல்ல.. இலவச ரேஷன் பொருளுக்காக பாஜவோ, அதன் தலைவர்களோ தங்கள் சொந்த பணத்தை தரவும் இல்லை.. அது மக்களின் வரிப்பணத்தில் இருந்தே தரப்படுகிறது.
கேலி செய்கிறார்கள்: ஆனால் பாஜகவினர் இலவச ரேஷன் பொருளுக்கு பதிலாக வாக்குகளை கடனாக கேட்டு வருகிறார்கள்.. இது சரியல்ல.. ஏழைகளிடம் இலவச ரேஷனுக்கு பதிலாக வாக்குகளை கேட்டு அவர்களை கேலி செய்வது பொருத்தமற்றது... இலவச ரேஷன் ஏழைகளுக்கு உதவவோ அல்லது அவர்களின் நிலையை மேம்படுத்த போவதில்லை" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் மாயாவதி.












Click it and Unblock the Notifications