என்டிஏவுக்கும் எங்களுக்கும்தான் போட்டியே.. காங்கிரஸ் சீனில் இல்லை! பிரசாந்த் கிஷோர்
பாட்னா: பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், எங்களுக்கும் என்டிஏ கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் தற்போது நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சிதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இக்கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து (என்டிஏ) அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மூன்றாவதாகத்தான் ஜன் சுராஜ் கட்சி இருக்கிறது.

இந்நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸும் அதன் கூட்டணியும் மூன்றாவது இடம்தான் பிடிக்கும் என்றும், எங்கள் கட்சிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் இடையேதான் போட்டி எனவும் பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பழைய சாதி அடிப்படையிலான அரசியலை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொடர விரும்புகிறது. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கட்சி கடந்த காலங்களில் பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. அவர்களுடைய ஆட்சி 'காட்டு தர்பார்' போன்றது. தேஜஸ்வி யாதவ் ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். அதாவது, அவரது கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை இல்லாத பீகார் குடும்பங்கள் அனைத்திற்கும் வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலோட்டமாக பார்த்தால் அடடே, இந்த ஆஃபர் சூப்பராக இருக்கிறதே என்று தோன்றலாம். ஆனால் இதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. 20 லட்சம் அரசு ஊழியர்கள் மட்டுமே உள்ள மாநிலத்தில், 1.50 பேருக்கு எப்படி அரசு வேலை வழங்க முடியும்? வேலை வழங்குவதற்கான செலவுகளை எப்படி சமாளிப்பார்?
மகாபந்தன் கூட்டணியின் முக்கிய பங்காளியான காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சியின் முழு ஆதரவை பெறவில்லை. இப்படிப்பட்ட பிளவுபட்ட அமைப்பை பீகார் எப்படி நம்ப முடியும்? காங்கிரஸை கூட்டணிகள் நம்பாததால்தான் தொகுதி பங்கீடு இன்றும் இறுதி பெறவில்லை. அந்த வகையில் நாங்கள்தான் இந்த பிரச்சனைகளுக்கு மாற்று. வாக்காளர்கள் புதிய அரசியல் மீதும், ஆட்சி மீதும் நம்பிக்கை வைத்தால் பீகாரின் 243 தொகுதிகளில் சுமார் 150 தொகுதிகளில் எங்களால் வெற்றி பெற முடியும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நல்லாட்சி போன்ற பிரச்சினைகளை நாங்கள் சரி செய்வோம்.
இந்த தேர்தல் லாலு, தேஜஸ்வி அல்லது பிரசாந்த் கிஷோரைப் பற்றியது அல்ல. இது உங்கள் குழந்தைகள் மற்றும் பீகாரின் எதிர்காலத்தைப் பற்றியது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications