ரக்ஷாபந்தன் பண்டிகை.. சகோதரனை பார்க்க சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்.. பீகாரில் 4 பேர் வெறிச்செயல்!
பாட்னா: பீகாரில் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்டி கொண்டாட சென்ற சிறுமியை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 11ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் சகோதரன் சகோதரிக்கும், சகோதரி சகோதரனுக்கும் ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துவர்.
அப்படி பீகாரில் உள்ள ஒரு சிறுமி தன் சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காக சென்ற போது 4 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாள். இது பற்றிய விவரம் வருமாறு:-

புதர் பகுதிக்கு தூக்கி சென்ற கும்பல்
பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள தனது தாய்மாமா வீட்டில் வசித்து வரும் சிறுமி, ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி தனது அண்ணணை சந்திக்க விரும்பினாள். உடனே கையில் ஒரு ராக்கி கயிறுடன் அண்ணணை சந்திக்க சிறுமி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த நான்கு பேர் கொண்ட கும்பல், கொஞ்சம் கூட இரக்கமின்றி சிறுமியை அருகில் உள்ள புதர் பகுதிக்கு தூக்கிச்சென்றது. பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

யாராவது காப்பாற்ற மாட்டார்களா?
ஈவு இரக்கமற்ற செயலால் சிறுமி அலறியுள்ளார். மேலும் யாராவது காப்பாற்ற மாட்டார்களா? என கத்தி சத்தமிட்டுள்ளார். இதற்கிடையே அந்த சாலைவழியாக சென்ற ஒரு வாகன ஓட்டிக்கு சிறுமியின் சத்தம் கேட்டது. இதையடுத்து தனது வண்டியை நிறுத்திவிட்டு புதர் அருகே சென்று பார்த்தார். அப்போது சிறுமியின் பரிதாபநிலையை கண்டு அதிச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து ஓடியது. இதையடுத்து சிறுமி ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒருவர் கைது
மனதை உறைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமியின் வாக்குமூலத்தையும் பெற்றனர். இதையடுத்து, குற்றவாளிகள் நான்கும் பேரையும் போலீசார் அடையாளம் கண்டனர். பவான் குமார், அன்கித் குமார், இமாமுதின் மற்றும் தினேஷ் குமார் ஆகிய நான்கு பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவன் கைது செய்யப்பட்ட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரிப்பு
சிறுமிக்கு நேர்ந்த துயர சம்பவத்தை அறிந்த உறவினர்களும் கிராம மக்களும் கொதித்தெழுந்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். உள்ளூர் மக்கள் கூறுகையில், ''பீகாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இதனால், மறைவான பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. போதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்து வரும் சமூக விரோதிகளை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்'' என்றனர்.












Click it and Unblock the Notifications