"நாளை காண்டம் கேட்பீங்க?".. ஐஏஎஸ் அதிகாரியின் திமிர் பேச்சுக்கு நாப்கின் நிறுவனம் பதிலடி.. சபாஷ்!
பாட்னா: விலையில்லா சானிட்டரி நாப்கின் கேட்டதால் ஐஏஎஸ் அதிகாரியால் அவமதிக்கப்பட்ட பீகார் பெண்ணிற்கு ஓராண்டுக்கான சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதாக இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அந்த பெண்ணுக்கு கல்வி உதவியையும் அளிப்பதாக அந்த இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. பீகாரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பெண்களில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் இந்த துறைக்கான நிர்வாக இயக்குநர் ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கை முடித்து விட்டு 9, 10 ஆம் வகுப்பு மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ரியா குமாரி
இந்த நிலையில் ரியா குமாரி என்ற ஒரு மாணவி தனக்கு ஒரு கேள்வி இருப்பதாக எழுந்து நின்றார். அப்போது ஹர்ஜோத், என்ன கேள்வி கேள் என்றார். உடனே அந்த பெண் சானிட்டரி நாப்கின்களின் விலை உயர்வால் எங்களை போன்ற ஏழை பெண்கள் அந்த நாப்கின்களை வாங்க இயலாமல் துணிகளை பயன்படுத்தி வருகிறோம். இந்த துணிகள் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கின்றன.

அடித்தட்டு மக்கள்
எனவே எங்களை போன்ற அடித்தட்டு பெண்களை கருத்தில் கொண்டு இலவசமாகவோ அல்லது குறைந்தபட்சம் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை இந்த அரசு வழங்குமா என அந்த மாணவி கேள்வி எழுப்பினார். ஏதோ மாணவி கேட்கக் கூடாது கேள்வியை கேட்டது போல் அந்த மாணவியை அவமானப்படுத்தினார் அந்த பெண் அதிகாரி.

ஜீன்ஸ்
அந்த அதிகாரி கூறுகையில் இப்போது நாப்கின் கேட்பீர்கள், பின்னர் அரசு உங்களுக்கு ஜீன்ஸ், செருப்பு வாங்கிக் கொடுக்க வேண்டும் என கேட்பீர்கள். இன்னும் விட்டால் இலவசமாக காண்டம்களை கொடுங்கள் என்று கூட கேட்பீர்கள், அதையெல்லாம் கொடுக்க முடியுமா என முகம் சுளிக்கும் அளவுக்கு ஐஏஎஸ் அதிகாரி பதில் அளித்திருந்தார்.

20 முதல் 30 ரூபாய்
அப்படியும் விடாத ரியா குமாரி, ஒரு 20 முதல் 30 ரூபாய் மதிப்பிலான நாப்கின்களை அரசால் வழங்க முடியாதா? அரசை தேர்வு செய்வதே மக்களின் வாக்குகள்தானே என மற்றொரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு ஹர்ஜோத்ஸ அப்படியெல்லாம் நினைக்காதீர்கள், நீங்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்கவே வேண்டாம். பாகிஸ்தான் போல மாறிவிடுங்கள் என தேள் கொட்டுவது போல் தொடர்ந்து கொட்டி கொண்டே இருந்தார்.

இலவச நாப்கின்
14 வயது சிறுமிகளிடம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் அவர்களை கொச்சைப்படுத்தும் அளவுக்கும் கேரக்டரை டேமேஜ் செய்யும் அளவிற்கும் இந்த பெண் அதிகாரி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பெண்ணியவாதிகள் கடும் கண்டனங்களை எழுப்பினர். இந்த நிலையில் ரியா குமாரிக்கு ஓராண்டுக்கான இலவச நாப்கின்களை வழங்க ஒரு நிறுவனம் முன் வந்துள்ளது.

கல்வி செலவையும் ஏற்கும் நிறுவனம்
டெல்லியில் உள்ள வெட் அண்ட் டிரை பெர்சனல் கேர் என்ற நிறுவனம்தான் ரியா குமாரிக்கு ஓராண்டுக்கான இலவச நாப்கின்களை வழங்குவதாகவும் அந்த பெண்ணின் கல்வி செலவையும் தாங்களே ஏற்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் அந்த மாணவிக்கு வேறு ஏதேனும் உதவிகள் கேட்டாலும் செய்ய தாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications