கொத்துக் கொத்தாக சரிந்த காகங்கள்! பீகாரில் அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. அந்த மரத்தடியில் என்னாச்சு
பாட்னா: பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது... இந்த சம்பவம் குறித்து அரசு அதிகாரி டாக்டர் அஞ்சலி குமாரி சின்னா செய்தியாளர்களிடம் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்..
பீகார் நவகச்சியா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. வழக்கம்போல அங்குள்ள பொதுமக்கள் வாக்கிங் போயிருக்கிறார்கள்.. அப்போதுதான், அங்குள்ள ஒரு பெரிய மரத்தின் அடியில் நூற்றுக்கணக்கான காகங்கள் கொத்து கொத்தாக இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பீகார் மரத்தடியில் காகம்
உயிரிழந்த காகங்கள் ஒருபுறமிருக்க, மேலும் சில பறவைகள் பறக்க முடியாமல் சோர்வுற்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதை பார்த்து பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்..
தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், உயிரிழந்த காகங்களின் உடல்களைப் பாதுகாப்பாக மீட்டு, அவற்றை உரிய விதிமுறைகளை பின்பற்றி அப்புறப்படுத்தினர்.. பிறகு இது குறித்த விசாரணையையும் கையில் எடுத்தனர்..
கொத்துக் கொத்தாக காகங்கள்
பீகாரில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாகவே காகங்கள் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்டமாக கருதப்பட்டது. ஆனாலும், காகங்கள் இறப்பிற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக, அந்த பறவைகளின் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பாட்னா மற்றும் போபாலில் உள்ள உயர்தர அரசு ஆய்வகங்களுக்கு விரிவான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
நேற்றைய தினம்தான் அந்த ரிப்போர்ட்கள் வெளியாகின.. அதில், அந்த பறவைகளுக்கு "ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா" எனப்படும் பறவை காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது..
இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் வைரஸ் பறவைகளிடையே மிக வேகமாக பரவக்கூடியது என்பதால், பாதிக்கப்பட்ட நவகச்சியா பகுதியை சுற்றியுள்ள சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பறவைகள் சம்பவம் மர்மம்
பொது இடங்கள், மரங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்தப் பாதிப்பு அருகில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குப் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய, பண்ணைகளில் உள்ள பறவைகளிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அரசு அதிகாரி டாக்டர் அஞ்சலி குமாரி சின்னா செய்தியாளர்களிடம் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அதில், தற்போதைய சூழல் முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.. தற்காப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்..
பீகார் மாநில அரசு
அதிகாரிகள் சாலையிலோ அல்லது மரத்தடியிலோ இறந்து கிடக்கும் பறவைகளையோ, நோய்வாய்ப்பட்டு தவிக்கும் பறவைகளையோ பொதுமக்கள் நேரடியாகத் தொட வேண்டாம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏதேனும் சந்தேகத்திற்குரிய பறவை உயிரிழப்புகள் தென்பட்டால் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசின் தொடர் கண்காணிப்பு மற்றும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் வைரஸ் பரவல் தடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications