கிணத்தை காணோம் பாணியில் திருட்டு! தண்டவாளத்தை ஆட்டைய போட்ட பலே 'பவாரியாஸ்'.. உடந்தையாக அதிகாரிகள்
இதற்கு முன்னர் இதுபோல வீட்டின் மேல் இருந்த செல்போன் டவர் ஒன்று முழுமையாக திருடப்பட்டுள்ளது.
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக விநோதமான திருட்டு சம்பங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ரயில் தண்டவாளம் திருடப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது. 2 கி.மீ நீளம் கொண்ட ரயில் தண்டவாளம் திருடப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் சமஸ்திபூரில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பந்தோல் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகில் 'லோஹாட்' சர்க்கரை ஆலை இயங்கி வந்திருக்கிறது. இந்த ஆலைக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக பந்தோல் ரயில் நிலையத்திலிருந்து தண்டவாளம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சர்க்கரை ஆலை இயக்கப்படாமல் இருந்துள்ளது. மட்டுமல்லாது ஆலையின் கருவிகளை பராமரிக்கவும் போதிய அளவு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனவே இந்த இயந்திரங்கள் முற்றிலுமாக பழுதாகியுள்ளது. ஆலையின் உரிமையாளர் இந்த ஆலையை விற்றுவிட திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து பழைய இரும்புகளை கொள்முதல் செய்யும் டீலரை அணுகியுள்ளார்.

டீலர்
அதன்படி அனில் யாதவ் மற்றும் ராகுல் குமார் ஆகியோரிடம் ஆலையின் இரும்பு பொருட்கள் விற்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆலையின் முக்கியமான இரும்புகளை உருக்கு ஆலைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆலையின் இரும்பு பொருட்களோடு சேர்த்து சுமார் 2 கி.மீ நீளம் கொண்ட ரயில் தண்டவாளத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். தொடக்கத்தில் இந்த சம்பவம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து ரயில்வேதுறை உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பான புகார் சென்றிருக்கிறது. புகாரின் அடிப்படையில் விசாரணையை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

விசாரணை
முதற்கட்ட விசாரணையில் தண்டவாளம் திருடப்பட்டுள்ளது உண்மையென தெரிய வரவே அடுத்தகட்ட விசாரணை தீவிரமடைந்தது. இதில் ரயில்வே பாதுகாப்பு துறையை சேர்ந்த காவலர்களே ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபானியைச் சேர்ந்த ஜமதார் முகேஷ் குமார் சிங், ஜாஞ்சர்பூர் புறக்காவல் நிலையத்தின் அதிகாரியாக பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. அதாவது இரும்பு கொள்முதல் செய்யும் டீலர்களிடம் இவர்கள் தண்டவாளத்தை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் சுமார் 2 கி.மீ அளவுக்கு தண்டவாளம் திருடப்பட்டுள்ளது.

இதேபோல
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் இந்த இரண்டு ஆர்பிஎஃப் காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். அதேபோல துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என ரயில்வே துறை உயரதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல இரும்பு கொள்முதல் டீலரான அனில் யாதவ் மற்றும் ராகுல் குமார் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகாரில் இது போன்று திருட்டு சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் ரூ.19 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் ஒன்று இதேபோல சில நாட்களுக்கு முன்னர் திருடப்பட்டது.

செல்போன் டவர்
அதாவது, செல்போன் டவர் பொருத்தப்பட்ட வீட்டிற்கு பல மாதங்களாக டவர் வைத்த நிறுவனம் பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளது. அதேபோல செல்போன் டவரிலும் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த திருடர்கள் டவரை சரி செய்வதாக கூறி மொத்த டவரையும் பிரித்து லாரியில் ஏற்றி சென்றிருக்கின்றனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து டவர் நிறுவனத்தின் மேனேஜர் டவரை தேடி வந்துள்ளார். டவர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications