தூக்கிலிடுங்க.. சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டோம்.. புதுச்சேரி வக்கீல்கள் முடிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கைதான 2 பேரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக புதுச்சேரி வழக்கறிஞர்கள் முக்கிய முடிவு எடுத்து அறிவித்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி திடீரென்று மாயமானார். புகாரை தொடர்ந்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் 4 நாட்கள் கழித்து சிறுமியின் வீட்டருக்கே உள்ள வாய்க்காலில் சாக்கு மூட்டையில் உடல் கிடைத்தது.

சாக்கு மூட்டையில் சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் அவரை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உடல் பிரதே பரிசோதனைக்காக ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையாகி இருப்பது உறுதியானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் புதுச்சேரியில் பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் இன்று காலையில் சிறுமியின் உடல் வைத்திக்குப்பத்தில் உள்ள பாப்பம்மாள் கோவில் இடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புதைக்கப்பட்டது. இந்த வழக்கில் தற்போது வரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் வழக்கில் கைதானவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் ஆஜராகப்போவது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பெண் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‛‛இந்த வழக்கை பொறுத்தமட்டில் 2 விஷயம் முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடையவர்களுக்கு புதுவை மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகப்போவது இல்லை. அவர்களுக்கு ஜாமீன் கோரப்போவதும் இல்லை. இன்னொரு விஷயம் இந்த வழக்கில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு வழக்கில் இறுதி அறிக்கை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல் விரைவு நீதிமன்றம் சட்டங்களுக்கு உட்பட்டு எவ்வளவு விரைவாக வழக்கை விசாரிக்க முடியுமோ அப்படி விசாரித்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். அந்த தண்டனையின் தீவிரம் என்பது வேறு யாரும் இதுபோன்ற தவறை செய்யக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். பெண் வழக்கறிஞர்களாக இதுதான் எங்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

அதேபோல் ஆண் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‛‛பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. போதைப்பழக்கம், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து பெண் குழந்தைகளை கொலை செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் வழக்கறிஞர்கள் நிலைப்பாடு என்னவென்றால் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, அதிகபட்சமாக தூக்கில் போட வேண்டும்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுமி என்பதால் தூக்கிலிட வேண்டும். சமுதாயத்தில் நீதித்துறையும் போலீசும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டு வருகின்றன. குற்றம் செய்தவர்களை தூக்கில் போடுவதற்காக நாங்கள் துணை நிற்போம். இதற்கு இங்குள்ள 1180 வழக்கறிஞர்களும் உதவி செய்வோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications